சர்வதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்மீது சர்வதேச ரீதியில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லை என்பதுடன் இண்டர்போலின் சிவப்பு அறிவித்தல் இல்லை என்பதும் உறுதியாகியதனையடுத்து தான் விடுவிக்கப்பட்டுள்ளதாக உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கம் பழவாங்கும் நோக்குடன் செயற்பட்டு வருவதாகவும் இதன்காரணமாக இலங்கைக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அறிக்கை ஒன்றின்; மூலம் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை காவல்துறையினருக்கெதிராக சர்வதேச இழப்பீட்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதற்கு தனக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தான் மகிழ்வடைவதாகவும் அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த 04ம் திகதி அமெரிக்கா சென்று கொண்டிருந்த வேளை டுபாய் விமான நிலையத்தில் வைத்து சர்வதேச காவல்துறையினரால் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது