இந்தியர்களின் தரவுகளை கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் தவறாக பயன்படுத்தியதா என்பது குறித்து எதிர்வரும் மார்ச் 31-க்குள் பதில் அளிக்குமாறு இந்திய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது.
இந்தியாவில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் முகப்புத்தகம் உள்ளிட்ட எந்த சமூக வலைத்தளம் ஈடுபட்டாலும் அரசு சகித்துக்கொள்ளாது எனவும் இந்திய மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மேலும், கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்திய இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் குறித்த விபரங்களை வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் இந்தியர்களின் தரவுகளை வைத்துக்கொள்ளும் முறை மற்றும் பயனர்களின் சம்மதம் பெறப்பட்டதா? என்பதற்கும் விளக்கம் கேட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தமது அரசியல் வாடிக்கையாளர்களுக்காக முகப்புத்தக பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முகப்புத்தகம் இழைத்த தவறால், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், முகப்புத்தக பயனர்களின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக மார்க் ஜுக்கர்பர்க் ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது