பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியினர் எவராவது வாக்களித்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.
அத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு தினத்தன்று ஐக்கிய தேசியக் கட்சியினர் அனைவரும் பாராளுமன்றில் பிரசன்னமாக வேண்டும். அதற்கான ஆலோசனைகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று சிறிகொத்தாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். இதன்போது கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க வேண்டியது எமது கடமையாகும். அதனை நாம் செய்ய வேண்டும். ஆகவே எதிர்வரும் நான்காம் திகதியன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதனை நாட்டு மக்கள் கண்டு கொள்வர் கொளவர். அதன்பின்னர் கட்சியின் பலம் அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிடுகையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்ததன் பின்னர் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம். அத்துடன் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு யாரும் என்னிடம் கோரவில்லை. இந்த பொறுப்பை ஒப்படைத்தால் உரிய வகையில் நான் செயற்பட தயாராக உள்ளேன். எனினும் தற்போதைக்கு கட்சி தலைவர் ஒருவர் உள்ளார். ஆகவே அவருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மேலும் தெல்தெனிய சம்பவத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் காரணம் என்று கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையில் கூறியுள்ளனர். அப்படியாயின் நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சிக்கு எதிராகவே கொண்டு வர வேண்டும். ஏனெனில் தெல்தெனிய சம்பவத்தின் சூத்திரதாரியை கண்டறிய கூட்டு எதிர்க்கட்சியினர் கண்ணாடி முன்நின்றால் உண்மை தெரியவரும் என்றார்.