குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க, ஜனாதிபதி தலையிடாததன் மூலம் அவர் மீண்டும் ஒரு முறை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை , ஐக்கிய தேசியக்கட்சியிடம் காட்டிக்கொடுத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு தனியான நிலைப்பாட்டுக்கு கொண்டு வர முடியாதன் இது தெளிவாக புலப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியை நம்பியே கூட்டு எதிர்க்கட்சி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தது. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எனினும் நாட்டு மக்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியிடம் காட்டிக்கொடுத்துள்ளார். ஜனாதிபதியை நம்பி, கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தமை மிகப் பெரிய தவறு.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றாலும் அரசாங்கம் ஒன்றை ஆட்சியில் அமர்த்தும் போராட்டத்தை நிறுத்த போவதில்லை எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.