குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணி விடுவிப்புக்கான உத்தியோகபூர்வ வரைபடம் பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து இன்னமும் கிடைக்கப் பெறவில்லை என மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிகின்றன. தமிழ் சிங்களப் புத்தாண்டுப் பரிசாக வலி.வடக்கில் காணி விடுவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நல்லிணக்கபுரத்தில் நடைபெற்ற வீடு கையளிப்பு நிகழ்வில் தெரிவித்திருந்தார்.
வறுதலைவிளானில் வீடு கையளிப்பு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போது, மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் பொ.சுரேஷ் எதிர்வரும் 16ஆம் திகதி வலி.வடக்கில் 650 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து காணி விடுவிப்புக்கான உத்தியோகபூர்வ வரைபடம் இன்னமும் வழங்கப்படவில்லை. எனவும், எந்தப் பகுதிகளில் காணிகள் விடுவிக்கப்படப் போகின்ற என்பதை அறிந்து கொள்வதற்கு இன்னமும் ஒரு வாரம் வரையில் செல்லும் எனவும் மாவட்டச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுவனிலிருந்து – மயிலிட்டிச் சந்தி வரையிலான பிரதான வீதியில், சுமார் 4 கிலோ மீற்றர் நீளமான பகுதி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது. பாதுகாப்புத் தரப்பினரின் முன்னரங்க வேலிகள் இந்த வீதியில் அகற்றப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் இந்த வீதியும், இதன் மேற்குப் புறமாகவுள்ள காணிகளும் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். பாதுகாப்புத் தரப்பினரின் உத்தியோகபூர்வ வரைபடம் கிடைக்காமல் எதனையும் உறுதியாகத் தெரிவிக்க முடியாது என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.