இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி ஏராளமான விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அங்குள்ள காட்டுப்பகுதிகளில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த தீயானது காடுகளின் ஏனைய இடங்களுக்கும் பரவியதன் காரணமாக பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தக் காட்டுத்தீ காரணமாக மிகவும் பெறுமதிமிக்க மரங்கள் கருகி உள்ளதாகவும் குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ;மின்கம்பங்கள் மற்றும் தொலைபேசிக் கோபுரங்கள் சேதமடைந்துள்ளதாகவும் கடும் புகை மூட்டம் காரணமாக பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்ற போதிலும் போதிய வன ஊழியர்கள் இல்லாத காரணத்தால், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது