இலங்கையின் கொழும்பை அண்மித்த கல்கிஸ்ஸ கல்வலபார பிரதேசத்தில் கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 86 வயதான தாயொருவர், கல்கிஸ்ஸ காவற்துறை சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு காவற்துறை அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார். காவற்துறையினருக்கு கிடைத்த விசேட தகவலுக்கமைய அவர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
3 பெண்களும், 1 ஆணுமென 4 பிள்ளைகளின் தாயான இவர் 4 அடி அகலமும், 5 அடி நீளமுமான பலகை மற்றும் சீமெந்து கற்களினால் அமைக்கப்பட்ட கூடொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, காவற்துறையினர் தெரிவித்தனர். குறித்த தாயின் மகளொருவர் தங்கியிருந்த வீட்டுக்கு வெளியிலேயே இந்த தாய் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூடு காணப்பட்டுள்ளது.
பாதுகாப்பை கருத்திற்கொண்டே தாயை தனிமைப்படுத்தி வைத்ததாக அவரது மகள் காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை, காவற்துறையால் காப்பாற்றப்பட்ட தாய் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது மகளை கைதுசெய்துள்ளனர்.