வேதாந்தாவின் துணை நிறுவனம்தான் ஸ்டர்லைட், இது குஜராத்தின் சில்வஸா மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி ஆகிய இரு பகுதிகளில் இயங்குகின்றது. தூத்துக்குடியில் உள்ள ஆலை ஓர் ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் தொன் தாமிரத்தை உற்பத்தி செய்கிறது. 2017 ஆம் நிதியாண்டில் அதன் வர்த்தகம் 11.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.
மஹாராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி நிறுவனம், முதலில் 1992 ஆம் ஆண்டு, ஸ்டர்லைட் நிறுவனத்துக்கு கடலோர பகுதியான ரத்னகிரியில் 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. ஆனால், உள்ளூர் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்ததை அடுத்து, மஹாராஷ்ட்ர ஆரசு இதற்கான ஒரு ஆய்வு குழுவை அமைத்தது. அவர்கள் அளித்த பரிந்துரையின் பிரகாரம், 1993 ஆம் ஆண்டு கட்டுமான பணிகளை நிறுத்தும்படி ஆட்சியர் ஸ்டர்லைட் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பினார். இதற்கு பின்தான், அந்நிறுவனம் தமிழகத்திற்கு வந்தது.
இது குறித்து பேசும் சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமன், “1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியம் இந்நிறுவனத்துக்கு தடையில்லா சான்றிதழ் அளித்தது. அந்நிறுவனத்தை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய கோரியது. சூழலியல் மாசை கருத்தில் கொண்டு மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ தொலைவில்தான் இந்நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்றது. இதற்காக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அந்நிறுவனம் செய்ய வேண்டும். ஆனால், இந்நிறுவனம் மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீ தொலைவிலேயே அமைக்கப்பட்டது.”என்கிறார்.
போராட்டமும் வழக்குகளும்
ஸ்டெர்லைட் தாமிர உருட்டு தொழிற்சாலை நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி பெரும் கேடினை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வந்தனர்.
1997-2012 ஆம் ஆண்டு காலத்தில் சில ஆண்டுகள் முறையான அரசு ஒப்புதல்களை புதுப்பிக்காமலும் ஆலையை நடத்தியதுதான் இந்த நிறுவனத்தின் மீதான பிரதான குற்றச்சாட்டு.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், 2010 ஆம் ஆண்டு நிறுவனத்தை மூடக்கோரியது. உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில், நூறு கோடி அபராதம் அளித்து நிறுவனம் தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்தது.
முடங்கியது ஸ்டெர்லைட்
ஆலையில் இருந்து விசவாயு கசிவு ஏற்பட்டதால் அதை சுற்றி இருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி இத் தொழிற்சாலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.
இந்த நிறுவனத்திலிருந்து இதுவரை 82 முறை விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது.
மார்ச் 30, 2013ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுவினர் ஆலைக்கு சென்று சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எதிர்ப்பு இயக்கமத்தின் ஏழு அம்சக் கோரிக்கைகள்
இதில் தூத்துக்குடி நகர்பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும் நடிகர் மன்சூர் அலிகானும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அண்மைய நாட்களில் ஆலை எதிர்ப்பு போராட்டங்கள் வலுவடைந்தன. மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சில நூதமான போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 23ஆம் திகதி போராட்டக்காரர்கள்மீது தமிழக காவல்துறை நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் 12பேர் உயிரிழந்தனர். இதற்கு மறுநாளும் ஒருவர் பலியாகினார்.
தமிழக மக்கள் ஈழத்தவர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்கள். முத்துக்குமார் போன்றவர்கள் தம்மை ஆகுதியாக்கி ஈழ விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள். இந்த நிலையில் இயற்கை உரிமைக்காக, சுற்றுப் புறச் சூழலுக்காக போராடும் தூக்குக்குடி மக்களுக்கு குரல் கொடுத்து, அவர்களின் பிரச்சினையை உலகறியச் செய்யும் பணிகளில் குளோபல் தமிழ் செய்திகளும் ஓர் ஊடகமாக இணைந்திருந்தது.
தொகுப்பு: குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர்
முன்னைய பதிவு:http://globaltamilnews.