தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் காவல்துறை துப்பாக்கி சூட்டில் பலியான விவகாரம் தொடர்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரிகள் குழு குறித்தும் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் தமிழக வழக்கறிஞர் ராஜ ராஜன் தாக்கல் செய்த மனுவையடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. குறித்த மனுவில் தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையால் சுகாதாரக்கேடு, சுற்றுச்சூழல் ஆபத்து இருப்பதால், அதை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் இரக்கமின்றி, சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் விரைந்து செயல்பட்டு வேகமாகத் தலையிடாவிட்டால், சட்டவிரோத நடவடிக்கைகள் தொடரும். காவல்துறையினர் மக்களைச் சுடும் சம்பவங்கள் தொடர்ந்துவிடும். காவல்துறையினர் தங்களுக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களை எல்லாம் அழித்துவிடுவார்கள்.
ஆதலால், தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட்டு துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களைக் கள ஆய்வு நடத்த வேண்டும், அல்லது, சார்பில்லாத அமைப்பு மூலம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார். இந்த மனு கடந்த 25-ம் திகதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து தூத்துத்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளதால், அவர்களிடம் அணுகி நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக வழக்கறிஞர் ராஜ ராஜன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரடியாக தங்கள் குழுமுழு மூலம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழகத்தின் தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபி ஆகியோரிடம் 2 வாரங்களுக்குள் அறிக்கை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் விவரங்கள், காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் சிகிச்சைகள், வசதிகள் குறித்து அந்த அறிக்கையில் இடம் பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது