குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் செயற்பாடுகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக சாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காவற்துறை திணைக்களத்தின் நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுக்குமாறு ஜனாதிபதி, காவற்துறை மா அதிபரை கடுமையாக எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி அண்மையில் காவற்துறை மா அதிபரை தனது இல்லத்திற்கு அழைத்து, நாட்டில் நடந்து வரும் குற்றச் செயல்கள் குறித்து விவாதித்துள்ளார். பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை குறித்து ஜனாதிபதி, காவற்துறை மா அதிபரிடம் வினவியுள்ளார். காவற்துறை மா அதிபரின் பலவீனமே குற்றச் செயல்கள் அதிகரிக்க காரணம் எனக் கூறியுள்ள ஜனாதிபதி, காவற்துறை மா அதிபரை கடுமையாக எச்சரித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தலைமையிலான வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதியின் செயற்பாடுகளை மறைமுக விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்தார்.