நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான அரசமைப்பின் 20வது திருத்தத்தை தற்போது சமர்ப்பிப்பதால் நாட்டில் பாரிய பிரச்சினைகள் உருவாகலாம் என உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி அமைப்புகள் ஸ்திரமற்றவையாக காணப்படும் இந்த சூழலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கினால் நாடு முற்றுமுழுதாக குழப்பத்திற்குள் சிக்கலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
20வது திருத்தம் என்பது தனியொரு கட்சி அல்லது நபர் சார்ந்த விடயமல்ல. இது முழு நாட்டையும் பாதிக்ககூடிய விடயம் என தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, 1978 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைமையும் ஒன்றாகவே அறிமுகப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். இந்த நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மட்டும் நீக்கிவிட்டு விகிதாச்சார முறையை நீக்காவிட்டால் சிக்கலான நிலமை ஏற்படும் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே தேர்தல் முறைமையில் ஏற்பட்ட மாற்றத்தால் ஸ்திரமற்ற உள்ளுராட்சி சபைகள் உருவாகியுள்ளன. மாகாணசபைகள் தேர்தல் முறையும் மாற்றப்பட்டுள்ளது, இந்த நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நீக்கப்பட்டால் நாடு சோமாலியாவாக மாறிவிடும் என உயர்கல்வியமைச்சர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.