TNAயில் இருந்து PLOT – TELO வெளியேற வேண்டும்….
சந்திரிக்கா அம்மையார் சுதந்திரக் கட்சியை, ஐக்கிய தேசியக் கட்சியிடம் அடகு வைத்துள்ளார். அதேபோல் கூட்டமைப்பையும், சுமந்திரன் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியிடம் அடகு வைத்துள்ளார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், 16 பேர் அணியின் முக்கியஸ்தருமான டிலான் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.
வவுனியா வெளிக்குளம் பிரதேசத்தில் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் வன்னி மாவட்ட தலைமைக் காரியாலய திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், வன்னி மாவட்டத்தில் இந்த அரசாங்கத்தால் எந்தவொரு அபிவிருத்தி செயற்ப்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக வவுனியாவில் எந்தவகையான அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய டிலான் பெரேரா, இங்கிருந்து நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் அபிவிருத்தி முன்னெடுப்புகள் குறித்து கண்டறியுமாறு தான் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இங்கு பல அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன, ஆனால் இன்று அவ்வாறு எதுவும் இடம்பெறுவதில்லை. இந்த நிலமைக்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தாமையே காரணம் எனக் கூறியுள்ளார்.
அது மட்டும் அல்லாமல் குறைந்தது தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்குக் கூட அவர்களால் தீர்வு பெற்று கொடுக்க முடியவில்லை என்பதோடு, அதற்காக அவர்கள் ஏன் முயற்சி எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தக்கவைத்து கொள்வதே சிறுபான்மை மக்களுக்கு உள்ள ஒரே ஆயுதம். ஆனால் சுமந்திரன் நிறைவேற்றதிகார முறைமை வேண்டாம் எனக் கூறுகின்றார்.
இவற்றையெல்லாம் நோக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை மீண்டும் துன்பதிற்குள் தள்ளவே முயற்சிக்கின்றது. அதனால் கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் சுமந்திரனின் நோக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்காக TELO, PLOT உள்ளிட்ட கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டும் என அவர் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா ஆலோசனை கூறியுள்ளார்.