யாழ் மாநகரசபையில் தீர்மாணம்…
இன அழிப்பு தொடர்பில் மனித உரிமை பேரவையினால் தீர்மானிக்கப்பட்ட 30/1 ஐ நடைமுறைப்படுத்தாது காலம் தாழ்த்தும் இலங்கை அரசை கண்டித்தும் தற்போது நிறைவேற்றாத நிலையில் இவ் விடயத்தை மனித உரிமை பேரவை பாதுகாப்புச் சபைக்கு கொண்டுவர வேண்டும் என இச் சபை கோருகின்றது என்ற தீர்மானத்தை மணிவண்ணன் முன்மொழிய லோகதயாளன் வழிமொழிந்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 5ம் அமர்வின் இரண்டாம் நாள் அமர்வு நேற்று இடம்பெற்ற போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட எமது மக்களிற்கு நீதி கிடைக்கும் வகையில் குளித்த விடயத்தினை மனித உரிமைப் பேரவையே பாதுகாப்புச் சபைக்கு முன்கொண்டு செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தினை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசை சேர்ந்த வி.மணிவண்ணன் முன்மொழிந்தார்.
குறித்த விடயமானது எமது மக்களின் ஒட்டுமொத்த அபிலாசையினையும் பிரதிபலிப்பதோடு அனைவரினதும் விருப்பமாகவும் உள்ளது. எனவே இவ் விடயத்திற்கு எவருமே எதிர்ப்பு கூற முடியாது.
இருப்பினும் இத் தீர்மானத்தினை இச் சபையில் நிறைவேற்றுவதன் மூலம் அதற்கான வலு உண்டா என்ற நிலையில் இதனை இங்கே எதிர் விவாதம் புரியாமல் இருப்பதே இத் தீர்மானத்திற்கு நாம் வழங்கும் கௌரவம் என முதல்வர் ஆனோல்ட் தெரிவித்தார்.
இந்த நிலையில் இறுதி யுத்த காலத்தில் இன அழிப்பு நிகழ்ந்த பிரதேசத்தில் வாழ்ந்து மீண்டவன் என்ற அடிப்படையிலும். இந்த மண்ணிலே நிகழ்ந்த இன அழிப்பின் கண் கண்ட சாட்சிகளிள் இச் சபையில் உள்ள ஒரே ஒருவன் நான் மட்டுமே ஆகும்.
இறுதி யுத்நம் என்னும் மிகப் பெரும் அத்தியாயத்தின் ஒருவராக இருக்கும் நான் இத் தீர்மானத்தை வழி மொழியும் தகுதி உடையவன் எனக் கருதி இதனை வழிமொழிகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ந.லோகதயாளன் தீர்மானத்தை வழி மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது