இதுவரை பகுதி நேர அரசியல்வாதியாகவே இருந்த நான் முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன் நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். கார்த்திக்கும், அவரது மகன் கவுதம் கார்த்திக்கும் மிஸ்டர் சந்திரமௌலி என்னும் திரைப்படத்தில் தந்தை-மகனாகவே நடித்திருக்கிறார்கள். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இதுதொடர்பாக கார்த்திக் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இதுவரை நான் பகுதி நேர அரசியல்வாதியாகவே இருந்தேன். முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை. சமீபகாலமாக நான் அரசியலை விட்டு விலகியே இருந்தேன். அதற்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் தான் காரணம்.
இனி, நான் முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். அவர்களும் பகுதிநேர அரசியலில் தான் ஈடுபட்டு இருக்கிறார்கள். இருவரும் முழு நேர அரசியல்வாதியாக மாறவேண்டும். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் தெரிவ்pததுள்ளார்.
நான் என் அப்பா முத்துராமனுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டேன். அந்த ஆசை நிறைவேறவில்லை. ஆனால் என் மகன் கவுதம் கார்த்திக் என்னுடன் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டான். அவனுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் இப்போது உள்ள இளைஞர்கள் கடினமாக உழைக்கிறார்கள். திறமையாக நடிக்கிறார்கள். கவுதம் கார்த்திக்கும் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துவிட்டான். தொடர்ந்து அவன் கடினமாக உழைத்து நல்ல பெயர் வாங்கவேண்டும் என்று அவனிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.