160
தற்போதைய தேர்தல் திருத்தங்களில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் ஒன்று வவுனியா ஓவியா விருந்தகத்தில் நேற்று நடைபெற்றது. சிஎம்விஈ எனப்படும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மையம் மற்றும் பெவ்ரல் எனப்படும் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு ஆகிய தேர்தல் கண்காணிப்பு குழுக்களின் ஒழுங்கமைப்பில் இந்த முழுநாள் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தத் தேர்தல் முறையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஒரு சிறப்பான புரிந்துணர்வைப் பெற்றுக்கொள்வதற்கும், அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டதாக இந்த நிகழ்வில் அறிமுக உரையாற்றிய பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
உள்ளுராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்ட விகிதாசாரம் மற்றும் தொகுதி அடிப்படையிலான கலப்பு தேர்தல் முறை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தல் முறைகுறித்து முரண்பாடான பல கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கலப்புத் தேர்தல் முறையின் சில அம்சங்களில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.அதேவேளை இந்தத் தேர்தல் முறை தொடர்பில் தவறான புரிந்துணர்வின் அடிப்படையில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேபோன்று, அந்த முறையில் மாற்றம் செய்யப்படக் கூடிய விடயங்களிலும், மாற்றம் செய்யப்பட முடியாத விடயங்களிலும் கருத்துக்கள் நிலவுகின்றன.
அத்துடன் சில பிரச்சினைகள் நாட்டின் அரசியல் கலாசாரத்தில் உள்ள தவறுகளின் அடிப்படையில் தோற்றம் கொண்டிருக்கின்றன. தேர்தல் பிரசார நிதி, கட்சிகளுக்கிடையில் ஜனநாயகததை உட்படுத்துதல் போன்ற விடயங்களில் தனியான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியுள்ளன.
.இந்தத் தேர்தல் முறைமையை, சில திருத்தங்கள் அல்லது மாற்றங்களுடன் மாகாணசபைத் தேர்தலில் கடைப்பிடிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில், அந்தத் தேர்தல் முறையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வைப் பெற்றுக் கொள்வதையும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love