தேவாலயங்களில் பாவ மன்னிப்பு கேட்கும் நடைமுறைக்கு தடைவிதிக்கக் கோரும் பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தேசிய சிறுபான்மையினர் ஆணையகம் , மதம் தொடர்பான பழக்கத்துக்கு தடைவிதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
கேரளாவில் ஒரு கிறிஸ்தவ தேவலாயத்தில், பாவ மன்னிப்புக் கேட்ட பெண்ணை 4 பாதிரியார்கள் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து கேரளத்தில் பாதிரியார்கள் மீது அதிக அளவிலான பலாத்கார முறைப்பாடுகள் வந்துள்ளன.
இதனையடுத்து தேசிய பெண்கள் ஆணையகம் நேற்று முன்தினம் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ள விசாரணை அறிக்கையில் தேவாலயங்களில் பாவ மன்னிப்பு கேட்கும் நடைமுறையை தடை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.
இந்தப் பரிந்துரையை நிராகரித்துள்ள தேசிய சிறுபான்மையினர் ஆணையகம் தேவாலயங்களில் பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்பது என்பது கிறிஸ்தவ மதத்தின் உள்ளார்ந்த பகுதி ஆகும். எனவே, அதனை தடை செய்ய முடியாது.
மேலும், மதம் சார்ந்த பழக்கவழக்கங்களில் எவ்விதத் தலையீடும் இருக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.