வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால் ஐ.நாவில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற நேரிடும்! எம்.ஏ. சுமந்திரன்
இலங்கை அரசு இணங்கிக் கொண்ட விடயங்களைச் செயற்படுத்த தவறினால் சர்வதேச அழுத்தத்தைக் கொடுப்பதற்கு சர்வதேச மேற்பார்வை நீடிக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இதற்காக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இன்னுமொரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் இலங்கை மீதான சர்வதேச கண்காணிப்பு முடிவுற்றது. தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்களை இலங்கை அரசு நிறைவேற்றுவதற்கு, அதன் மீது சர்வதேச அழுத்தம் பிரயோகிக்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு சர்வதேச கண்காணிப்பு இலங்கை மீது இருக்கவேண்டும் என்றும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை மீதான சர்வதேச கண்காணிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கை மீதான பன்னாட்டு மேற்பார்வையை நீடிப்பதற்கு மற்றொரு தீர்மானம் அவசியம் என கூறிய அவர் அந்தத் தீர்மானம் சில வேளைகளில் நிறைவேற்ற முடியாமல் போகும் நிலமையும் ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா இல்லை. அமெரிக்காவுக்கு வாக்களிக்கும் தகுதி இல்லை. இலங்கை அரசையும் இணங்கச் செய்யும் அளவிற்கு சாத்தியம் இருக்குமோ தெரியவில்லை எனக் குறிப்பிட்ட அவர் ஐ.நா. செயலர் மற்றும் ஐ.நா. பொதுச் சபையின் ஊடாக அழுத்தம் கொடுத்து பன்னாட்டு மேற்பார்வையை நீடிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவேண்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபை வேண்டாம், பன்னாட்டு மேற்பார்வை வேண்டாம் என்று சொல்பவர்கள், மாற்று வழி என்ன என்பதைச் சொல்வதில்லை. “எல்லாம் வேண்டாம் வேண்டாம்” என்று சொன்னால் என்ன செய்யப் போகிறோம். இருப்பதையும் விட்டு அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.