இலங்கை கட்டுரைகள்

அந்த மாடுகள் எல்லாம் மொழு மொழு என்று அழகான மாடுகளாக இருந்தன…..

– மயூரபிரியன் –

அந்த மாடுகள் எல்லாம் மொழு மொழு என்று அழகான மாடுகளாக இருந்தன. வண்டில் பூட்டப்பட்டு போட்டிக்கு தயாராகிக்கொண்டிருந்தன. சில வருடங்களுக்கு பிறகு இந்த வண்டில் சவாரி இந்த மண்ணில் நடைபெறுவதாக பேசிக்கொள்கிறார்கள்.

“நாங்கள் பரம்பரை பரம்பரையாக மாடுகளை சவாரிக்காக வளர்த்து வருகிறோம். பாட்டன் காலத்தில் இருந்து நாங்கள் சவாரி ஓடுவது வழமை. பாட்டனுக்கு பிறகு அப்பா ஓடினார் இப்ப நான் ஓடுகிறேன் என கூறுகிறார் சவாரிக்கு வந்த ஒருவர், அத்துடன் தனது முன்னைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

“யுத்தகாலத்திற்குமுன் நாங்கள் சவாரி பார்க்க போவோம். அப்போது யாழில் பல இடங்களில் இருந்தும் சவாரி விட ஆட்கள் அதிகளவில் வருவார்கள். அக்காலத்தில், வண்டில்கார கந்தையா , சுப்பு என்போர் சவாரியில் பிரபலமாக இருந்தார்கள். அவர்கள் மிகத் திறமையான மாடுகளை வைத்திருந்தார்கள்.

பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக சவாரிகள் குறைவடைந்து வந்து இல்லாமலே போகும் நிலை ஏற்பட்டு, இப்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. மகிழ்ச்சியாக உள்ளது” என்றார் அவர்.

ஆம் வண்டிச் சவாரிகளுக்கென்றே வருடக்கணக்காக மாடுகள் வளர்க்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான கிராமங்களில் பசுமாடுகளை பாலுக்காகவும் நாம்பன் மாடுகளை வயல் வேலைகளுக்காகவும் வளர்ப்பர். பெரும்பாலானோர், ஒருபோதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க முன்வரார்.

குடும்பத்தில் ஒருவராக மாடுகளை வளர்ப்பதும் அது இறக்கும் வரை அதை பராமரித்து வருவதும் வழமையானதாகும். அனேகர் மாட்டிறச்சியை உண்பதும் இல்லை. இந்நிலையில், சவாரிக்கு மாடுகளை வளர்க்கத் தொடங்கிவிட்டனர்.

“மாடுகளை எங்கள் குடும்பங்களில் ஒருவராகவே வளர்த்து வருகின்றோம். முன்னைய காலத்தில் எங்கள் குடும்பத்தில் பல ஜோடி மாடுகள் நின்றன. மாட்டு தொழுவங்கள் இருந்தன. தற்போது அவை குறைந்து உள்ளன. இப்ப என்னிடம் சிவலை மாடுகள் இரண்டு நிற்கின்றன. அவற்றை தான் நான் சவாரிக்கு கொண்டு வந்தன்.” என்கிறார் அங்கு சாவரிக்கு மாடுகளை கொண்டு வந்த ஒருவர். அவர் அந்த மாடுகள் பற்றி மேலும் விரிவாகக் கூறுகிறார்.

“சாவரி ஓடும் மாடுகளின் பெறுமதி தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்ட அவர் “சுமார் 20 இலட்சங்களையும் தாண்டி செல்லும்.” என்றார். ஆம் சவாரி மாடுகள் நன்றாக சவாரியில் ஓடினால் சாவாரித் திடலிலேயே அந்த மாடுகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு ஆக்கள் இருப்பார்களாம். இதில் வெளிநாட்டில் உள்ளவர்களும் ஆர்வம் காட்டுவதாக கூறினார்.

“சவாரிகளில் ஆர்வம் உள்ள வெளிநாட்டில் வசிக்கும் சிலர் இங்கு மாடுகளை வாங்கி அதனை பராமரிப்பாளர்களிடம் கொடுத்து பெரும் பணம் செலவழித்து பராமரித்து போட்டிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதற்காக யாழ்ப்பாணத்தில் சவாரி மாடுகளின் பயிற்றுவிப்பாளர்கள், சவாரி ஓட்டுபவர்கள் என சில திறமையானவர்கள் உள்ளனர். இவர்கள் பயிற்றுவிக்கும் மாடுகள் போட்டிகளில் வெற்றி பெறும் போது பயிற்றுவிப்பாளர்களுக்கும் கேள்வி அதிகரிக்கும்.” என்று கூறுகிறார்.

சாவரிகளின் ஓட்டத் தூரம் ஆனது, 500 மீற்றர் தூரமாகும். மாடுகள் கால் ஊன்றி ஓடும் போது அவற்றின் கால்கள் , வண்டில் சில்லுகள் மண்ணில் புதையாத வாறு நிலம் கரடு முரடாக இருக்க வேண்டும். அவ்வாறான திடல்கள் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் தற்போது மட்டுவில், நீர்வேலி, வட்டுக்கோட்டை, பொன்னாலை , மாதகல் போன்ற இடங்களிலே உள்ளன.

இந்தப் போட்டியில் பலர் ஆர்வத்துடன் பங்குகொள்ள தயாராகவுள்ளனர். இவர்களது ஆர்வத்திற்கு கிடைக்கும் பரிசு என்ன என்ற அவர்களிடம் கேட்டபோது,

“சவாரி போட்டிகளின் போது பெறுமதியான பரிசல்கள் என பெரிதாக எவையும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வீட்டு உபகரண பொருட்களையே பரிசில்களாகத் தருவர்.
நாம் பரில்களை இலக்கு வைத்து போட்டிகளில் கலந்து கொள்வதில்லை. எமது இலக்கு எமது மாடுகள் தான். இந்த வட்டாரத்தில் ,இந்த மாவட்டத்தில் “ஓட்டக்கார மாடுகள்” என எமது மாடுகள் பெயர் எடுக்க வேண்டும் என்பதே எமது இலக்கு.” என்பது விசித்திரமாகவே இருக்கு. வெற்றிக்கான பரிசுகள் எதையும் எதிர்பார்க்காது பலவருடங்களாக இதற்காக தமது நேரத்தை செலவழிக்கும் இவர்களுக்கு; எதிர்பார்ப்பும் இருந்துகொண்டுதானிருக்கிறது.

“இந்த மாட்டு வண்டி சவாரி போட்டிகள் மாடுகளை துன்புறுத்தி நடாத்தப்பட்டு வருதாகவும், அதனால் அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சில தன்னார்வளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் யாழில் கடந்த ஒரு சில வருடங்கள் இந்த சவாரி போட்டிகளுக்கு சில பிரதேச செயலகங்கள் தடை விதித்து இருந்தன.” என கதிர்காமு ஜெயராஜசிங்கம் தெரிவிக்கிறார்.

“குறிப்பாக எந்தமாதிரியான துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது?” என அவரிடம் கேட்டபோது,

“குறிப்பாக மாடுகளுக்கு மதுவைப் பருக்குதல் , கடுமையாக அடித்து துன்புறுத்துதல் , தடிகளில் ஆணி அடித்து குத்துதல் (அங்குசம் போன்று) என்பவை போட்டிகளில் தடை செய்யப்பட்டு உள்ளன. ஆனாலும் அவை பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அவற்றை போட்டி நடுவர்கள் அவதானிக்கக்கூடிய வகையில் முறைப்படுத்தப்பட்டுள்ளது.”; என்றார்.

ஆனாலும் பொலீசார் இதில் சம்பந்தப்பட்டு நடவடிக்கைகள் எடுத்துவருவதாக சவாரிபோட்டியாளர்கள் விசனம் தெரிவித்தனர். இது பற்றி பொலீசாரிடம் கேட்ட போது,

“விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக எமக்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம். சவாரிகளுக்கு கொண்டுவரப்படும் மாடுகளை சிலர் சிறிய வாகனங்களில் ஏற்றி வருகின்றபோது, அது மிருகவதை எனக்கொள்ளப்பட்டு அவ்வாறு மாடுகளை கொண்டு வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றோம்.

அதேவேளை மாடுகளை ஒரு இடத்தில் இருந்து பிறிதொரு இடத்திற்கு கொண்டு செல்வதாயின் கிராம சேவையாளரின் கடிதம் தேவை. இல்லை எனில் அதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் மாடுகளை கடத்துவதனை கட்டுப்படுத்த இவ்வாறன நடவடிக்கைகள் அவசியம்.

மாடுகள் துன்புறுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டு , அவற்றுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்காத பட்சத்தில் நாம் சவாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டோம்” என தெரிவித்தார்.

இவ்வாறான பாரம்பரிய விளையாட்டுக்களை தொடர்ந்து பேணுவதற்கு, ஒரு ஒழுக்கக் கோவையை தயாரிக்கவேண்டும் எனக் கூறுகிறார் கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ். அவர் மேலும் கூறுகையில்,

“எமது சமயங்களில் விலங்குகளை கடவுள்களாக மதித்து வணங்குகின்றோம். அவ்வாறு இருக்க நாம் விலங்குகளை வதைக்க மாட்டோம். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான பாரம்பரிய விளையாட்டுகளை முன்னெடுத்து செல்ல நாம் ஒரு ஒழுக்க கோவையை தயாரிக்க உள்ளோம். பாரம்பரிய விளையாட்டுக்களில் நிபுணத்துவம் உடையவர்களை இணைத்து ஒரு ஒழுக்க கோவையை உருவாக்குவதன் ஊடாக எமது பாரம்பரியம் , தொன்மை , பண்பாடு , வரலாறு என்பவற்றை இழக்காது பாதுகாக்க முடியும் அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பை நாம் நாடுகிறோம்” எனத் தெரிவித்தார்.

பாரம்பரிய விளையாட்டை கைவிடக்கூடாது என்ற அடிப்படையிலும், மனமகிழ்வுக்காகவும் விளையாடும் இந்த விளையாட்டை பார்ப்பதற்கு பொதுமக்களும் மிக ஆர்வமாக உள்ளனர்.

“ஆ…500 மீற்றர் தூரத்தை 20,30 செக்கனில் சில மாடுகள் தாண்டிவிடும். அதைப்பார்க்கும் போது குதுகலம்தான். நல்ல சந்தோசமாக இருக்கும்” என்கிறார் சவாரிபார்க்கவந்த 45 வயது மதிக்கதக்க கனகலிங்கம் ஆறுமுகம் என்பவர்.

இவ்வாறு மாட்டுச்சவாரி ஒட்டுநர்களும், பொதுமக்களும் மாட்டுச்சவாரியில் ஆர்வம் காட்டிவருவதும் மரபுபேண்வாதிகள் அதை ஒழுங்கமைக்க முயல்வதும் நடந்துகொண்டிருக்கும்போது, விலங்குகளை வதைத்தலுக்கு எதிராக செயற்படுபவர்கள் விடுவதாயில்லை.

“நாகரிக வளர்ச்சி யடைந்துள்ள இந்த கால கட்டத்திலும் பாரம்பரியம் என மாடுகளை துன்புறுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பாரம்பரிய வழக்கம் என்று பல ஆலயங்களில் வழகொழிந்து போன வேள்வி (ஆடு, கோழி என்பவற்றை பலியிடும் முறை) வழிபாட்டு முறை யாழில்.சில கிராமங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அந்த வழிபாட்டு முறைமையை நிறுத்துமாறு பலரும் கோரிக்கை முன் வைத்த போது எமது பாரம்பரியம் , எமது வழிபாட்டு உரிமை என சிலர் குரல் கொடுத்தனர். அது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு தற்போது ஆலயங்களில் மிருகங்களை பலியிடுதல் யாழ்.மேல் நீதிமன்றினால் தடை செய்யபப்ட்டு உள்ளது. அதே போல இந்த சவாரிகளின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதர்களின் இரசனைக்காக மிருகங்களை துன்புறுத்துவதனை எம்மால் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சவாரிக்காக இளங்கன்றுகளுக்கு கடுமையான பயிற்சி வழங்குகிறார்கள். மாடுகள் கன்றுகளாக இருக்கும் போதே தெரிந்தெடுத்து சவாரிக்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக அந்தக் கன்றுகளை நீண்ட தூரங்களுக்கு விரைவாக ஓட்டிச் செல்லல் , கடற்கரை மணல்களில் ஓட்டி செல்லல், என கடுமையான பயிற்சிகளும் உணவுக்கட்டுப்பாடுகளும் அவற்றுக்குண்டு.
அத்துடன் இந்த சவாரிகளுக்கு பயன்படுத்தப்படும் மாடுகளுக்கு ஆண்மை நீக்கம் (நலமடித்தல் என பேச்சு வழக்கில் சொல்வார்கள்) செய்யப்படுகிறது. இவ்வாறு தயார் படுத்தலில் இருந்து ஓட்டப்போட்டி நடைபெற்ற முடியும் வரையில் மாடுகளை துன்பப்படுத்துகின்றனர்.” என விலங்குகளைத் துன்புறுத்துவதற்கு எதிரா செயற்படும் சண்முகம் கார்த்தி கூறுகின்றார்.

இவ்வாறான நிலமைகள் உள்ள போது , எமது பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான இந்த விளையாட்டு தொடருமா? என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.