தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த தற்போதுள்ள சட்டங்கள் போதாது என தலைமை தேர்தல் ஆணையாளர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ‘இந்திய தேர்தல் ஜனநாயகத்துக்கு உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் ஆணையாளர் ஓ.பி.ராவத் கலந்து கொண்டு பேசினார்.
அதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
ஜனநாயகம், யதார்த்தத்தில் இயங்காது. ஜனநாயகத்துக்கு என்று ஒரு துணிச்சல், தன்மை, நேர்மை, அறிவு தேவைப்படுகிறது. அவைகளெல்லாம் இப்போது மங்கிப்போய் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்வதானால், அவையெல்லாம் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன.
தூய்மையான தேர்தல்கள், தலைமைக்கு சட்டப்பூர்வமான வசந்தம் போல் இருக்கும். தேர்தல்கள் மாசுபட்டால், நாட்டு மக்கள் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பின் மீதும் குறை கூறுவார்கள். எனவே இது கவனிக்க வேண்டிய அம்சம் ஆகும்.
போலிச்செய்திகள் வெளியாவதும், மக்களை நம்ப வைப்பது பெருகி வருவதும், தகவல்கள் திருட்டு நடைபெறுவதும், லாபம் பார்ப்பதும், தகவல் தொடர்பை குறிவைத்து செயல்படுதலும் நடக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் இணைய பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதை தேர்தல் ஆணையகம் உணர்ந்து இருக்கிறது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா போன்று சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் இந்தியாவில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
தேர்தல்களில் பணம் தவறாக பயன்படுத்தப்படுவது பற்றி பேசப்படுகிறது. தேர்தலில் பணத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதை உறுதி செய்வதற்கு தற்போதைய சட்டங்கள் போதாது. எனவேதான் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுகளை அரசாங்கமே ஏற்றுக்கொள்வது இப்போது சாத்தியம் இல்லை.
எனவேதான் இதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையகம் வலியுறுத்தி வருவதாக தலைமை தேர்தல் ஆணையாளர் ஓ.பி.ராவத் சுட்டிக் காட்டி உள்ளார்.