இலங்கையின் பல மாவட்டங்களில் நிலவிவரும் வரட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்; பணிப்புரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் கலந்துரையாடியதன் பின்னர் இந்த நிவாரண பணிகளுக்காக 9,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரட்சியான காலநிலையால் வடமத்திய மாகாணத்தின் சுமார் 420,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான குடிநீர், உலர் உணவு உள்ளிட்ட ஏனைய நிவாரணங்களை வழங்குவதற்காக முப்படையினரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானத்தின் படி மேற்குறிப்பிட்ட நிவாரண பணிகளுக்காக மாதமொன்றிற்கு 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த நிதியை மாவட்ட செயலாளருக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வரட்சி காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரித நிவாரணம் வழங்கும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், மஹவிலச்சிய, துனுமடலாவ, எலபத்கம மற்றும் ஒயாமடுவ ஆகிய பிரதேசங்களுக்கு இன்று வரட்சி நிவாரணம் வழங்கப்பட்டன.
நிவாரணம் வழங்கும் செயற்திட்டம் நாளையும் நாளை மறுதினமும் தொடர்ந்து இடம்பெறவுள்ளன. கூட்டுறவு நிலையங்களினூடாக குறித்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதுடன், இரு வாரங்களுக்கு ஒருமுறை உலர் உணவுப் பொதியொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அனைத்து ஊடகங்களும் முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய தகவல்களையும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் பற்றிய விபரங்களையும் குறித்த மாவட்ட செயலாளர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது