சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் தேவை அதிகரித்துவரும் நிலையில், மழை பொய்த்துப் போகும் ஆண்டுகளில் பெரும் நெருக்கடி ஏற்படுகின்ற நிலையில், கழிவுநீரை சுத்திகரித்து விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் பருவமழை சரியாகப் பெய்யாத நிலையில், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் அனைத்துமே வறண்டுபோயுள்ளன.
பெரும்பாலான காலங்களில் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளும் சென்னைக் குடிநீர் வாரியம், நகரின் கழிவுநீரைச் சுத்திகரித்து சோதனை முறையில் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் அடுத்த ஆண்டு இந்தக் குடிநீர் விநியோகம் ஆரம்பமாகலாம் எனத் தெரிவித்துள்ள குடிநீர் வாரியம் முதற்கட்டமாக, நெசப்பாக்கத்திலும் பெருங்குடியிலும் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவித்துள்ளது