170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றியீட்டி உறுப்பினர்களான ஒன்பது பேர் தற்போது உறுப்பினர்களாகவில்லை.
இறப்புக்கள் , கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டமை , மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளமையே காரணம்.
யாழ்.மாநகர சபைக்கு தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் தெரிவான சு. விஜயகாந்த் தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்கமையால் அவரது உறுப்புரிமை நீக்கப்பட்டது. அவரது இடத்திற்கு அவரது மனைவியான நர்மதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை யாழ்.மாநகர சபையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஜெகன் என அழைக்கப்படும் கே.வி.குகேந்திரன் இரட்டை பிரஜாவுரிமை உடையவர் என மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அதனால் அவர் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதில்லை.
அதே போன்று மாநகர சபைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தெரிவான வி. மணிவண்ணன் மாநகர சபை எல்லைக்கு வசிக்காதவர் எனவே அவர் உறுப்பினராக இருக்க முடியாது என அவருக்கு எதிராகவும் மேல் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதனால் அவர் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதில்லை.
நெடுந்தீவு பிரதேச சபைக்கு தமிழரசு கட்சி சார்பில் தெரிவான ச. லோகேஸ்வரன் உயிரிழந்தமையால் அவரது இடத்திற்கு ந. பரமேஸ்வரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தெரிவான சி. நவகோடி தனது சொந்த விருப்பில் தனது உறுப்பினர் பதவி விலகி கொண்டார். அவரது இடத்திற்கு த. சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று வல்வெட்டித்துறை நகர சபைக்கு தமிழரசு கட்சி சார்பில் தெரிவான க. சதிஸ் தமது கட்சிக்கு கட்டுப்படவில்லை என கட்சியில் இருந்து தமிழரசு கட்சி நீக்கியது. அதற்கு எதிராக அவர் யாழ்.மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வலி.தெற்கு பிரதேச சபைக்கு தமிழரசு கட்சியின் சார்பில் தெரியான ஜி.பிரகாஸ் தமது கட்சியின் விதிமுறைகளை மீறினார் என அவரை கட்சியில் இருந்து நீக்கியமையால் அவரது உறுப்புரிமை வறிதாக்கப்பட்டது. அவரது இடத்திற்கு அ. தவபிரகாசம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை ஜி.பிரகாஸ் தன்னை கட்சியில் இருந்து நீக்கியமை தவறு என யாழ்.மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஓரிரு வழக்கு தவணையில் , தனது சொந்த விருப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி வழக்கினை வாபஸ் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வலி.தெற்கு பிரதேச சபைக்கு தமிழரசு கட்சி சார்பில் தெரிவான இ.குமாரசுவாமி உயிரிழந்தமையால் , அவரது இடத்திற்கு இ. கங்காதரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
வலி.கிழக்கு பிரதேச சபைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தெரிவான ச. பிரதீபன் தனது சொந்த விருப்பில் உறுப்பினர் பதவி விலகியமையினால் அவரது இடத்திற்கு இ.மயில்வாகனம் தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வாறாக ஒன்பது உறுப்பினர்களில் ஆறு உறுப்பினர்களின் பதவி விலகல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டு உள்ளது. ஏனைய மூவரின் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளமையால் அவர்களின் இடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவில்லை.
Spread the love