வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்பின் பிரதிநிதிகளின் சந்திப்பு ஒன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, வடக்கு கிழக்கின் எட்டுமாவட்டத்தையும் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இந்த பேரணி நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான வவுனியா மாவட்ட அமைப்பின் பேச்சாளர் கா. தவராசா இன்றைய சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீட்சி மற்றும் நீதியை வலியுறுத்தியும், ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் இதற்கான நீதி எட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறவுள்ளது.
இப் போராட்டத்திற்கு, வடக்கு கிழக்கை சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அமைப்புக்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அனைவரது ஒத்துழைப்புடனும் நடைபெறும் இந்தப் போராட்டம் வெற்றி பெறும் எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.