மக்களின் தகவல்கள் பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை என முகப்புத்தக நிறுவனரான மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்துள்ளார். முகப்புத்தக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த மாதத்துடன் 15 ஆண்டுக்காலம் நிறைவு பெறுகின்ற நிலையில் கடந்த ஆண்டு முகப்புத்தக நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தது.
முக்கியமாக, பயனர்களின் தகவல்களை கசியவிட்டமை அவர்களின் தகவல்களை மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்தமை என பல்வேறு விவகாரங்களில் சிக்கியிருந்தது.
இதனையடுத்து இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையில் ஒரு கட்டுரையை எழுதியுள்ள மார்க் ஜக்கர்பர்க் நாங்கள் மக்களின் தகவல்களை விற்பனை செய்வதில்லை எனவும் தாங்கள் தகவல்களை விற்பதாகப் பல செய்திகள் எழுந்தாலும் தாங்கள் அவ்வாறு செய்வதில்லை என தெரிவித்துள்ளார்.
மக்கள் விரும்பும் பக்கங்கள், அவர்கள் கிளிக் செய்யும் செய்திகள் மற்றும் இதர சைகைகளின் அடிப்படையில் அவர்களுக்கான பிரிவை உருவாக்குகிறோம். அந்தப் பிரிவில் விளம்பரங்களைப் பதிவிடுவதற்கு விளம்பரதாரர்களிடம் பணம் வசூலிக்கிறோம். மக்களின் தகவல்களில் எவற்றைப் பயன்படுத்தி விளம்பரங்களைக் காட்ட வேண்டுமென்பதை தேர்வு செய்யும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. எந்தவொரு விளம்பரதாரரையும் மக்கள் தடை செய்துகொள்ள முடியும்.
விளம்பரங்களுக்காகச் சில தகவல்களை சேகரிக்கிறோம் என்பது உண்மைதான் என்ற போதிலும் மக்களின் அனுமதியில்லாமல் அவர்களின் தகவல்களை எந்த பெருநிறுவனத்துக்கும் வழங்கியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
முகப்புத்தக நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு குறித்து கடுமையான ஆய்வுகள் நடத்தப்பட்டுவந்த நிலையில் அவர் தனது தரப்பு நியாயங்களை அக்கட்டுரையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது