கடந்த 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுள்ள விசாரணைகளில் இதுவரை 12 கடற்படையினர் நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக கடந்த மூன்று மாதங்களுக்குள் இந்த 12 பேரும் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இவ்வாறு இரகசிய வாக்குமுலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு இரகசிய வாக்குமூலம் வழங்கிய 12 கடற்படையினரும் கடத்தப்பட்ட 11 இளைஞர்களும் தடுத்து வைக்கப்பட்ட இடங்களிலும், கடத்தலுடன் தொடர்புபட்ட பிரதானிகளின் கீழ் சேவையாற்றியவர்களும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இந்த கடத்தல், கப்பம் பெறல் மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பிலான குற்றப் புலனயவுப் பிரிவினரின் விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து அறிந்திருந்தும் அதனை மூடி மறைத்து, குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்தமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.