அரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அரசியலமைப்பு சபையில் இரா.சம்பந்தன் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது மகிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவரான பின்னர், அவர் அரசியலமைப்புச் சபை உறுப்பினரானார். இதனால் சம்பந்தன் தனது அரசியலமைப்பு சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
இந்த நிலையில் அரசியலமைப்பு சபை உறுப்பினர் வெற்றிடத்துக்கு டக்ளஸ் தேவானந்தாவை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, சபாநாயகரிடம் பரிந்துரைத்திருந்தார்.
எனினும் இந்தப் பதவிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்தே பரிந்துரையை முன்வைக்க வேண்டும் என்பதால் சபாநாயகர் கரு ஜெயசூரிய அந்தக் கோரிக்கையினை நிராகரித்திருந்தார்.
இந்நிலையிலேயே தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், மகிந்த ராஜபக்ஸவும் கலந்துரையாடி, இரா.சம்பந்தனின் பெயரை முன்மொழிவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.