சர்வதேச கிரிக்கெட் பேரவையின் செயற்குழு கூட்டம் துபாயில் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இதில் முக்கிய பல விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2ம் திகதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபைகளின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவில் 2021-ம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கிண்ணப் போட்டி மற்றும் 2023-ம் ஆண்டு உலக கிண்ணப் போட்டி ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என ஐ.சி.சி. வற்புறுத்தி வருகின்ற போதும் இந்திய அரசு இதுவரை வரிவிலக்கு அளிக்காதமை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இங்கிலாந்தில் 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியனுக்கான இறுதிப்போட்டிப் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமம் வழங்குவது மற்றும் பாகிஸ்தான் , இந்திய அணிகளுக்கிடையிலான உலக கிண்ணப் கிரிக்கெட் போட்டி என்பன குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை உலக கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை இணைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் இதன்போது விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.