தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பமாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 18ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதுடன் தமிழகத்தில் வெற்றிடமாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுவதுடன் அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் எதிர்வரும் ; 26-ம் திகதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படுகிறது. வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது