இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை கடந்த 3 ஆண்டுகளில் மிக மோசமாக அதிகரித்துவிட்டதாக பல்வேறு ஆய்வறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஊழியர் சேம லாப நிதியம் அதனை மறுத்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.2 அளவுக்கு உயர்ந்துள்ளதாக கடந்த பெப்ரவரி மாதத்தில் வெளியான பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டதாக மத்திய தொழிலாளர் பணியத்தின் வருடாந்த வேலைவாய்ப்பு – வேலையின்மை அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மேலும் சில ஆய்வுகளிலும் கடந்த 3 ஆண்டுகளில் வேலையின்மை அதிகரித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இதனை முற்றாக மறுத்துள்ள ஊழியர் சேம லாப நிதியம் அமைப்பு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதத்தில் 8.96 லட்சமாக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2019 ஜனவரி மாதம் வரையில் 76.48 லட்சம் பேர் புதிதாகச் சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் இணைந்துள்ளனர் எனவும் இது அமைப்பு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் இணைந்த 2.44 லட்சம் பேர் 22 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். 2.24 லட்சம் பேர் 18 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள். 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 7.03 லட்சம் பேரும், அதற்கு முந்தைய மாதத்தில் 7.16 லட்சம் பேரும் சமூகப் பாதுகாப்பு திட்டமான ஊழியர் சேம லாப நிதியத்தில் இணைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. ஊழியர் சேம லாப நிதியம் அமைப்பானது 6 கோடிக்கும் அதிகமான மாதாந்திர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.