சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் முற்றாக நீக்கப்பட்டு விட்டதாகவும் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டதாகவும் அமெரிக்க ஆதரவு பெற்றுள்ள சிரியா ஜனநாயக படைகள் தெரிவித்துள்ளன.
ஐ.எஸ் அமைப்பின் கடைசிக் கட்டுப்பாட்டு இடமாக இருந்த பாகூஸினை கைப்பற்றியதனையடுத்து அங்கு சிரியா ஜனநாயக படையினர் வெற்றிக் கொடிகளை உயர்த்தி கொண்டாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரியா மற்றும் ஈராக்கில் 88,000 சதுர கிலோ மீற்றர் நிலப் பரப்பளவை ஐஎஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில் சிரியாவில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த முழுப்பகுதியையும் கைப்பற்றி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சிரியாவில் உள்ள பாகூஸ் கிராமத்தில் மீதமிருந்த ஐஎஸ அமைப்பினர் பதுங்கி இருந்த நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் அவர்கள் மீதான இறுதி தாக்குதலை சிரியா ஜனநாயக படைகள் ஆரம்பித்திருந்தது.
அப்பகுதியில் இருந்த அதிக அளவிலான பொதுமக்கள் இந்த மோதல்களிலிருந்து தப்பித்து சிரியா ஜனநாயக படைகளின் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் பல ஐ.எஸ் அமைப்பினரும் பாகூஸ் கிராமத்தை விட்டுச் சென்றிருந்த போதிலும் அங்கேயே தங்கியிருந்தவர்கள் தற்கொலை தாக்குதல்கள் மற்றும் கார் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினார்கள். இந்தநிலையில் ஐ.எஸ் அமைப்பினை முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டதாக சிரியா ஜனநாயக படைகள் அறிவித்துள்ளது எனினும், நைஜீரியா, ஏமன், ஆப்கானிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் ஐஎஸ் அமைப்பு தனது இருப்பை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது