நாட்டில் தற்பொழுது நிலவும் கடுமையான வரட்சியினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.
இக் காலநிலையின் காரணமாக குடிநீர்ப் பிரச்சனையும் சில பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளது. இதேவேளை களுத்துறையில் 50 ஆயிரம் குடும்பங்கள் வரட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் கடல் நீர் தண்ணீருடன் கலந்திருப்பதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பல மாவட்டங்களுக்கு குடிநீர் தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 200 குடிநீர் தாங்கிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக 8000 நீர் தாங்கிகளையும் தமது அமைச்சு வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக கிராம சேவை உத்தியோகத்தர்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மதத்தலங்களுக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வறட்சி நிலையை எதிர்நோக்கியுள்ள பிரதேச மக்கள் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புக்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை காவல்துறை மற்றும் இராணுவத்தின் உதவியை பெற்று அந்தந்த பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். தற்பொழுது வறட்சியான நிலையில் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காட்டுத்தீ தற்பொழுது பரவி வருகிறது என்றும் இது தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 24 மணித்தியாலமும் தற்போதைய நிலைமை தொடர்பில் இடர் முகாமைத்துவம் மத்திய நிலையம் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி மேலும் குறிப்பிட்டார்.