தாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு தெரிவித்தார்.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் ; மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
30 ஆண்டுகள் போருக்கு பின் ஒரு சகாப்தம் முடிந்திருக்கின்றது. ஒரு தலைமுறையே எங்கள் தேசத்தை விட்டு போகவேண்டிய கட்டாயத்தினை காலம் எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகையினாலே மீதி இருக்கின்ற நாங்கள் வளர்ந்துவரும் இந்த இளம் சமுதாயத்திற்கு தலைமை தாங்குகின்ற இரட்டிப்பான பொறுப்பை எங்கள் தோளிலே சுமந்திருக்கின்றோம்.
ஆகையினாலேதான் இங்கே கூடியிருக்கும் அரசியல் . அரசாங்கம், அரசு என்ற மூன்று பகுதியையுடைய பிரதிநிதிகளையும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள். வௌ;வேறு பகுதிகளில் கடமையாற்றிக் கொண்டிருந்தாலும் தமிழரை பொறுத்தவரையில் இருப்பது ஓரு தேசம், இருப்பது ஒரு எதிர்காலம் கட்டவேண்டியது ஒரு சமுதாயம் ஆகையினாலே கட்டியமைக்கவேண்டிய அந்த சமுதாயத்திற்கான குறைந்தது குறிப்பிட்ட காலத்திற்காவது உங்கள் வேற்றுமைகளை விட்டு எங்கள் மக்களுக்காக பணிபுரியுங்களென்று தாழ்மையுடன் நான் கேட்டுக்கொள்வதுடன் அதுவே இந்த தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டில் நாங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய திடமான தீர்மானம் ஆகுமென்று ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.
எமக்கு செல்லவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கின்றது. செய்யவேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றது. ஆகையினாலே பேச்சுக்களையும் சந்திப்புக்களையும் குறைத்து அதிகளவில் வேலை செய்யவேண்டிய ஒரு கட்டாயம் எங்கள் மத்தியில் உள்ளது. இந்த புத்தாண்டிலே வடமாகாணம் ஒரு முன்மாதிரியான மாகாணமாக இருக்கவேண்டும் என்பதே எனது நோக்கமென்றும் குறிப்பிட்ட ஆளுநர், வடமாகாணத்தின் 28 பில்லியன் ரூபா வரவு செலவுத்திட்டத்தில் நான் நேற்று கையொப்பமிட்டுள்ளதுடன் இந்த 28 பில்லியனில் நாங்கள் எவ்வளவு வடமாகாணத்திற்குள் உழைத்துக் கொள்ளப்போகின்றோம் என்பது கேள்விக்குறியாகவும் கவலைக்குரியதாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த மாகாணத்தின் முழுவருமானத்தையும் எங்களுக்குள்ளேயே நாங்கள் உழைத்துக் கொள்ளமுடியும். ஏனெனில் பொருளாதார சுதந்திரம் இல்லாத ஒரு சமுதாயம் அரசியல் சுதந்திரத்தை யோசிக்கமுடியாது. ஆகையினாலே அடிப்படையாக எமது மக்கள் பொருளாதார சுதந்திரத்தை அடையக்கூடிய வழிமுறைகளை நாங்கள் தேடவேண்டியதுடன் அது எங்கள் ஒவ்வொருவருடைய கடமையாகவுள்ளது என்றும் ஆளுநர் ; குறிப்பிட்டார்.
தேசத்தை கட்டியெழுப்பும் பணியிலே அரசியல் சின்னங்களையும் அரசியல் யாதார்த்தங்களையும் குறிக்கோள்களையும் ஒரே ஒருமுறையாவது பின்வைத்து இந்த மக்களை நிமிர்த்த செய்வதற்காக முன்வாருங்களென வடமாகாணத்தின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
1 comment
இருப்பது இரு தேசம், கட்டவேண்டியது பல சமுதாயங்கள். அடைய வேண்டியது அரசியல் பொருளாதார சுதந்திரம். தேடவேண்டியது வழிமுறைகள். இவற்றை செய்யக்கூடியவர்கள் வளர்ந்துவரும் இளம் சமுதாயத்திற்கு தலைமை தாங்க வேண்டும்.