Home இலங்கை வட்டுக்கோட்டை குடும்பத்தலைவர் கொலை வழக்கினை மீள ஆரம்பிக்குமாறு விண்ணப்பம்

வட்டுக்கோட்டை குடும்பத்தலைவர் கொலை வழக்கினை மீள ஆரம்பிக்குமாறு விண்ணப்பம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரம் மீதான விசாரணையை மீள ஆரம்பிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் சார்பில் நகர்த்தல் பத்திரம் ஊடாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் இந்த நகர்த்தல் பத்திரத்தை முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இந்தக் குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றில் செய்யப்பட்ட மனு ஒன்றின் ஊடாக  இடைநிறுத்தப்பட்டது. எனினும் அந்த மனுவைத் தாக்கல் செய்தோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளப்பெற்றுள்ளனர். அதனால் வழக்கை மீளவும் ஆரம்பிக்கும் வகையில் வரும் 29ஆம் திகதி மன்றில் அழைக்குமாறு அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விண்ணப்பம் செய்துள்ளார்.

மேலும் அன்றைய தினம் எதிரிகள் ஆறு பேரையும் மன்றில் முன்னிலையாக அழைப்புக் கட்டளை அனுப்ப உத்தரவிடுமாறும் அவர் கோரியுள்ளார்.

பின்னணி. 

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடந்த ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்துக்கான 50 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டி 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தப் போட்டில் இருதரப்பினருக்கு இடையே முறுகல் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. கைகலப்பில்  யாழ்ப்பாணம் பிரதான வீதியைச்  சேர்ந்தவரும் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24) என்னும் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.

சம்பவத்தையடுத்து  மல்லாகம் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணை இடம்பெற்றது. அதனையடுத்து 6 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழான குற்றப்பத்திரிகை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் சாட்சியப் பதிவுகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அப்போதைய நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகளின் சட்டத்தரணிகளால் இந்த வழக்கை இடைநிறுத்துவதற்கான மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடத்த  ஆட்சேபனை தெரிவித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான ஆரம்ப விசாரணையில் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் முன் வைத்த சமர்ப்பணத்தை முகதளவில் ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இந்த வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை உத்தரவை 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6ஆம் திகதி வழங்கியது.

எனினும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் யாழ்ப்பாணத்திலிருந்து மாற்றலாகி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றதால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை 2018ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் மனுதாரர்கள் மீளப்பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் இந்தக் கொலை வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மீளத் திறக்க சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

#murder #stjohnscollege #stpatrickscollege #vaddukodai

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More