யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை நடத்த (DO) பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் காவற்துறையினர் விண்ணப்பித்துள்ளனர். “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் அலுவலகம் சோதனையிடப்பட்டது. இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மாவீரர்களின் படங்கள் மற்றும் தமிழீழ வரைபடங்கள் மீட்கப்பட்டன. அதனால் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கோப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று இராணுவ அலுவலகரால் ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாணவர்கள் இருவரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது” என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்கள் இருவரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சோ. சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் நேரில் சென்று சந்தித்தனர். மாணவர்கள் தொடர்பில் சட்ட மா அதிபருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். #preventionof terrorismact #terrorismactsrilanka #jaffnauniversity #policearrest #jaffnauniversity studentunion