குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரங்களில் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் கனரக வாகனங்கள் உட்புக முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலைகாரணமாக இரண்டு கிழமைகளுக்கு பின்னர் நாளைய தினம் திங்கட்கிழமை இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதனால் மாணவர்களின் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் அனைத்து தரப்பினரும் ஈடுபட்டுள்ள நிலையிலையே முதல்வர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் பல பாடசாலைகள் உள்ளன. பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் வீதிகளில் வாகன நெரிசல்கள் அதிகமாக காணப்படுகின்றன. எனவே மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பாடசாலை நாட்களில் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் , மதியம் 1 மணி முதல் 2 மணி வரையிலும் பாரவூர்திகள் , டிப்பர்கள் , சுற்றுலா பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாநகர சபை எல்லைக்குள் உட்பிரவேசிக்க , வீதியோரங்களில் நிறுத்தி வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எனவே மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சாரதிகள் இந்த அறிவித்தலை மதித்து நடக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
#schools #jaffnamunicipalcouncil #EmmanuelArnold #Mayor #vehicles #banned