166
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் பால் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, யாழ். பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி வறிதாக்கப்பட்டதை அடுத்து, அதே சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு தகுதி வாய்ந்த அதிகாரியாக ( Compitent Authority) யாழ். பல்கலைக் கழக சிரேஷ்ட பேராசிரியர் க. கந்தசாமி நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
இந்த நியமனம் தொடர்பான விசேட வர்த்தமானி நகர திட்டமிடல் , நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் இன்றிரவு வெளியிடப்படும் என்று உயர் கல்வி அமைச்சு வட்டாரங்களில் இருந்து அறிய வந்தது.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதும், யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கான நியமனம் குறித்து உயர் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்படும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
பல்கலைக் கழக சட்டத்துக்கமைவாக புதிய துணைவேந்தருக்கான தேர்தலை நடாத்தி, பல்கலைக்கழக பேரவையின் சிபார்சுடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் புதியவரொருவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் வரை – மூன்று மாத காலத்துக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பௌதிகவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியரான க. கந்தசாமி, தனது பல்கலைக் கழக சேவையில் பௌதிகவியல் துறைத் தலைவராகவும், விஞ்ஞான பீடாதிபதியாகவும் பதவி வகித்ததுடன், யாழ். பல்கலைக் கழக பொறியியல் பீடம், தொழில் நுட்ப பீடம் அகியவற்றின் ஸ்தாபக பீடாதிபதியாகவும் இருந்தவராவார். அத்துடன் இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களுள் ஒருவராகவும் செயற்படுகிறார்.
Spread the love