குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி இன்று 817 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்றைய தினம் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணிலே உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்
இன்று காலை வட்டுவாகல் பொது நோக்கம் மண்டபத்திற்கு அண்மையில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காலையில் இருந்து பிற்பகல் 4 மணி வரை அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவுகளுக்கு ஊடகவியலாளர் சுமந்தன் நீர் ஆகாரம் கொடுத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார் தொடர்ந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த இடத்திலேயே உயிரிழந்த உறவுகளுக்காக பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்
அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு க்கு நாளையதினம் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் வழங்கப்பட இருக்கின்ற மகஜரை ஊடகங்களுக்கு வெளியிட்டனர் இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு
முள்ளிவாய்க்கால்,மே 16-2019.அன்புள்ள செயலாளர்-ஜெனரல் அன்டோனியோ கெடரெஸ்,
இலங்கையில் காணாமற் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் தமிழ் பெற்றோர்கள் நாங்கள் கீழே கையொப்பமிட்டுள்ளோம். இன்று தமிழர்களின் இலங்கை இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நிறைவு தமிழர்களின் நெஞ்சங்கள் வெடித்த நாள் . முள்ளிவாய்க்காலில் நாங்கள் இன்று உண்ணா விரதம் இருக்கிறோம். 145,000 மேற்படட தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் இரக்கம் காட்டாமல் படுகொலை செய்யப்பட்டார்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் பற்றிய உண்மையைச் சொல்லுவதில் ஸ்ரீலங்கா உறுதியாக இல்லை , காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என இலங்கை அறிவித்துள்ளது. இன்னும் 25,000 தமிழர்கள் காணாமல் ஆக எப்பட்டுள்ளார்கள்.
தமிழர்களை கொலை செய்யும் அல்லது கொடுமைப்படுத்தும் ஒவ்வொரு சிங்கள குற்றவாளிகளுக்கும், ஸ்ரீலங்கா ஒருபோதும் தண்டித்ததில்லை தண்டிக்கப்போவதுமில்லை.
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிக்க இலங்கைக்கு அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலன் தீர்மானத்துக்கு கூட இனி காத்திருக்க முடியாது.
யுத்தம் முடிவடைந்ததில் இருந்து தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009 மே மாதம் 145,000 அப்பாவி மக்களை படுகொலை செய்த சிங்களவர்களை தமிழர்கள் வெறுமனே நம்ப முடியாது. இலங்கை இராணுவம் இன்னமும் தமிழர்களின் வீடுகள், நிலங்கள் மற்றும் பண்ணைகளை ஆக்கிரமித்து வருகிறது. மேலும் இலங்கை இராணுவம் தமிழ் பெண்களையும், ஆண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து பாலியல் அடிமை முகாம்களை இலங்கையில் நடாத்துகின்றது. ஸ்ரீலங்காவின் கொடூரமான பயங்கரவாத சட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தால் இன்னும் பல தமிழர்கள் கடத்தப்பட்டு கொண்டேயுள்ளனர் .
ஆகையால், இப்போது ஒரு நல்ல நேரம் , சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) கொண்டு செல்வதற்கும், தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கும், காணாது ஆக்கப்பட்டோரை கண்டுபிடிக்கவும். இதை நீங்கள் செய்ய வேண்டிய நேரம் இது .
நன்றி.,உண்மையுள்ள,கீழே காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் பெற்றோரால் கையொப்பமிடப்பட்டதுஎன குறிப்பிடப்பட்டுள்ளது
#வவுனியா #வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் #முள்ளிவாய்க்காலில்
#உணவு தவிர்ப்புப்போராட்டம் #mullivaikal