இலங்கையில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு வெடிப்புச் சம்பவங்களின் பின்னரான பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாகவும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (31) காலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப அலுவலகத்தில் இடம் பெற்றது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மன்னார், வவுனியா பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர். பிரியதர்சன் தமைமையில் குறித்த விசேட கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில், சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகளின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் நாட்டில் இடம் பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பின் பின்னர் மன்னார் பகுதிகளில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் பார தூரமானதும் , மிக முக்கியமாக கருதப்படக்கூடியதுமான விடயங்கள் தொடர்பாக மன்னார் சிவில் சமூக மட்ட பிரதி நிதிகளால் மனித உரிமை ஆணைக்ககுழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறிப்பாக வடக்கு-கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக காணப்படுவதாகவும் அதிகளவிலான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் அநாகரிகமான முறையில் சோதிக்கப்படுவதாகவும், நடாத்தப்படுவதாகவும் கருத்துக்களை முன் வைத்திருந்தனர்.
குறித்த கருத்துக்களை பெற்ற பின்னர் கருத்து தெரிவித்த மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர்,,,
குறிப்பாக பொது மக்கள் அரச அதிகாரிகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சில பகுதிகளில் இடம் பெற்று வரும் கைதுகள் தொடர்பாகவும் சில முஸ்ஸீம் பிரதேசத்தில் இடம் பெறும் நிலம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
ஆணைக்குழு இவ் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தியிருப்பதுடன் இவ் விடயம் தொடர்பில் எதிர்வரும் 11 ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் புத்தி ஜீவிகளை அழைத்து மாவட்டத்தில் இருக்கும் பிரச்சினைகளை எடுத்து கூறுவதுடன் குறித்த கலந்துரையாடலுக்கு இராணுவ காவல்துறை உயர் அதிகாரிகளையும் அழைப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் காணப்படும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி ஆரய்ந்து பல முக்கியமான தீர்மானக்களை எடுக்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#மன்னார் #மனித உரிமை ஆணைக்குழு #கலந்துரையாடல் #குண்டு வெடிப்பு