ஹிஸ்புல்லா
முஸ்லீம்கள் இலங்கையில் மாத்திரமே சிறுபான்மையினர் என்றும் உலகத்தில் நாமே பெரும்பான்மையினர் என்றும் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, அதனால் எவரும் அடக்கி ஒடுக்கிவிடலாம் என நினைக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தனது ஆளுநர் பதவியை இராஜினாமாச் செய்த ஹிஸ்புல்லா, கிழக்கின் காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தனது ஆதரவாளர்களை சந்தித்து உரையாடினார். இதன்போதே அவர் இவ்வாறு கூறினார். தாம் பதவி விலகியமை குறித்து கவலைப்பட ஏதுமில்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இவேளை தமது மக்களின் பாதுகாப்பிற்காகவும், கௌரவத்திற்காகவும் பதவி விலகியதாகவும் இதன் மூலம் முஸ்லீம் மக்கள் தமது ஒற்றுமையை நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் செய்றபாட்டில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் உள்ள முஸ்லீம் தலைமைகளும் ஒன்றிணைந்திருப்பதாகவும், கண்டி போன்ற தென் பகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கபீர் காசீம், ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லீம் அரசியல் தலைவர்கள்கூட தம்முடன் ஒற்றுமையாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தலதா மாளிகையின் முன்னாள் ஒன்று கூடிப் போராட்டம் நடாத்திய பௌத்த துறவிகள் தம்மீது பொய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும், அதனை விசாரணைகளின் மூலம் இரண்டு வாரங்களுக்குள் தெளிவுபடுத்த ஜனாதிபதிக்கு தாம் காலக்கெடு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வடக்கு கிழக்கிற்கு வெளியில் உள்ள முஸ்லீம்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றும் அதற்கான செயற்பாடுகளிலேயே தற்போது அனைத்து முஸ்லீம் தலைவர்களும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். #ஹிஸ்புல்லா #காத்தான்குடி #கபீர்காசீம் #ரவூப்ஹக்கீம்