“உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மதநிறுவனங்களை நோக்கி சில கேள்விகள்” என்ற தலைப்பில் நிலாந்தன் (26.05.2019) ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் கோயில்களின் காலம் முடிந்துவிட்டது என்று மு. தளையசிங்கம் கூறியிருக்கிறார். ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றிய மிக முக்கிய ஆன்மீக, இலக்கியச் சிந்தனையாளர், செயற்பாட்டாளர் அவர். ஒரு புதுமதத்தை, முழுமதத்தை அவர் கனவு கண்டார் என்று கூறிச் செல்லும் அவர் அதுபற்றிய தெளிவான விளக்கம் தராததால் பிழையான கருதுதல்களுக்கு இட்டுச் செல்லலாம் என்பதால் அதைச் சாட்டாக வைத்து இவற்றை எழுதுகிறேன்.
இன்று கோயில்களின் காலம் முடிந்துவிட்டது என்று கூறியதற்குரிய காரணம் சரியாக விளக்கப்பட வேண்டும். இன்று தோன்றிய ஞானிகள் அதாவது விவேகானந்தர், அரவிந்தர், ரமணர், இராமகிருஸ்ணர், ராமதாஸ் கண்ணையா யோகி எவரும் கோயில் கட்டச் சொல்லி எவரையும் ஏவியதும் இல்லை. தாம் செய்ததும் இல்லை. எமது குரு ஸ்ரீ நந்தகோபாலகிரி, இன்று கோயில்கள் எல்லாம் வெற்றுக்கட்டங்களாக இருப்பதற்குரிய காரணம், அங்குள்ள தெய்வங்களை மனம் ஒப்பிய பிரார்த்தனைகளால் “வாலயம்” பண்ணி, அவர்களின் அருளை நிலைநாட்டுவதற்குரிய ஆற்றல்பெற்ற பிராமணர் இல்லாமல் போய் அவர்கள் அனைவரும் பணஞ்சேர்க்கும் பெருச்சாளிகளாக மாறியதே என்கிறார். இது நமது கோயில்களுக்குத்தான் பொருத்தமென்று நினைப்பது தான் தவறு. எல்லாவகையான மத நிலையங்களின் நிலையும் இதுதான். இக்காலத்தில் வாழ்ந்த மேற்கத்தேய ஞானியான ஃபாதர் பியோவுக்கு என்ன நடந்தது? வக்ரிகான் பாப்பாண்டவரே அவரைப் புறக்கணித்தார். ஆனால் சிலுவையில் அறையப்பட்ட யேசுவின் stigmata அவர் உள்ளங்கைகளிலும் மற்றும் ஆணி அறையப்பட்ட ஏனைய இடங்களிலும் இரத்தம் கசியத் தொடங்கிய பின்னரே பாப்பாண்டவரே தலை குனிந்தார்.
இனிமேல் மதம் என்பது எப்படியாக இருக்கப்போகிறது?
இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற விவேகானந்தர், பரமஹம்ச யோகானந்தர் (ஒருயோகியின் சுயசரிதை எழுதியவர்) ஆகிய இருவரை மட்டுமே பெரும் ஞானிகளாக மேல்நாட்டார் கணித்தனர். “ஆன்மீக அனுபவங்களின் பன் முகத்தன்மை” என்ற நூலை எழுதிய வில்லியம் ஜேம்ஸ் எனும் உளவியலாளர் விவேகானந்தரை “எனது அன்புக்குரிய குருவே” (my dear master) என அழைத்தார். மற்றவரும் அவ்வாறே போற்றப்பட்டார். இவர்கள் தனிப்பட்ட மதங்கள் பற்றி பேசியதில்லை. எல்லா மதங்களும் கூறும் ஆன்மீக ஒருமைப்பாட்டையே அழுத்தினர். அரவிந்தர் பேர் மனதின் இறக்கம் பற்றி பேசினார். ரமணா “நான் யார்?” என்று உங்களையே கேளுங்கள் என்றார். இவர்கள் எல்லாரும் எக்காலத்துக்கும் உரிய ஆத்ம ஞானம் என்று Aldous Huxly ல் குறிப்பிடப்படும் Perennial philosophy பற்றியே பேசினர். இதையே மு.த. முழுமதம் என்றார் (total religion) இன்றைய விஞ்ஞானமும் இதையே நோக்கிச் செல்கிறது.
“ஆத்மீகம் என்பது தண்ணிச் சோத்துக்கு தேங்காய் சம்பல் அல்ல. அது ஆறாத நோய் தீர்க்கும் அருமருந்து” என்றார் நமது குரு.
மு.த. தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க அகமும் புறமுமாகப் போராட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அகம் என்பது சமயத்துக்குள் புகுந்து கொண்ட நாவலர் வழிவந்த நமக்குள் இருக்கும் சாதிபாகுபாடு. புறமென்பது நமது உரிமைகளைத் தரமறுக்கும் பெரும்பான்மை இனத்தோடான போராட்டம். அவர் எழுதியுள்ள “சர்வோதயமும் அரசியலும்” என்ற சிறுநூல் இதற்கான அடிபெயர்ப்பே.
ஒருவன் அகிம்சைப் போராட்டத்தை தேர்ந்தெடுத்து தன்மக்களுக்கு தலைமை தாங்கும் பட்சத்தில் அதற்கான ஆன்மீக வலு தனக்குள் இருக்கிறதா என்பதை அறிந்தவனாய் இருக்க வேண்டும். அரவிந்தர், காந்தி, ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற எதற்கும் தயாரான தலைவர்களாய் இருக்க வேண்டும். ஒரு போராட்டத்தின்போது மக்கள் மந்தைகளாகவே இருப்பார்கள். அவர்களை தன்வழி திருப்பி, அவர்களது கர்மங்களை, பிழைகளை தன்மேலேற்றவல்ல தலைவர்களாக இருக்க வேண்டும். அப்படி ஈழத்தில் எவராவது இருந்தார்களா? இல்லை.
சரி ஆயுதப்போராட்டத்தின் போது, அந்தப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்ற நம்தலைவர்களால் முடிந்ததா? இல்லை. அப்படி மக்கள் போராட்டமாக மாற்றுவதாகப் பாவனை காட்டினார்களே ஒழிய அப்படிச் செய்யவில்லை. அதனால்தான் கடைசி நேரத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 50,000 பேர் வரை சரணடைந்தபோது ஆச்சரியப்பட்ட ராணுவத்தளபதிகள், “நீங்கள் இவ்வளவு பேரும் எங்களை எதிர்த்தும் போராடியிருந்தால் எம்மால் வெற்றி பெற்றிருக்க முடியாது. இது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டபோது அவர்கள் அசடுவழிய நின்றனர் என்று கேவலமாக பத்திரிகைகளில் வந்தன. இதையும்விட வேடிக்கையானது ஒரு அக்காவும் தம்பியும் ஆயுதங்களோடு மறைந்திருந்த போது தம்முன்னே வந்த ராணுவத்தைச் சுடாது ஒளிந்திருந்தனர். உயிர்கொல்வது பாவம் என்பதால் தாம் சுடவில்லை என்று கூறினர் என்றால் பாருங்களேன் மக்கள் போராட்டம் என்ன நிலையில் இருந்ததென்று!
நிலாந்தன் முறையாக வரலாற்றைப் பார்க்கவில்லை. இன்று நேற்றா பாமர மக்கள் தேவாலயங்களுக்குள்ளும் கோவில்களுக்கள்ளும் சென்று பதுங்கினர். காலாகாலமாக நடந்து கொண்டிருப்பது இதுதானே? பாபரிலிருந்து திப்புசுல்தான் வரை இந்தியாவுக்குள் புகுந்த ஆக்கிரமிப்பாளர்கள், மற்றும் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்கள் என்று வந்த ஆக்கிரமிப்பாளர்கள் எல்லாம் முழுக்கோவில்களையும் சின்னாபின்னமாக்கினர்! அங்கு புகுந்த மக்களை பெண்களை, பிள்ளைகளை இரத்த ஆற்றில் மிதக்விட்டனர்! இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே நம் கோவில்களுக்குள்ளே கடவுளர் இரந்தனர்! இல்லை, இல்லை அவர்களும் படுகேவலமாகச் சிதறடிக்கப்பட்டனர், சின்னா பின்னமாக்கப்பட்டனர்! ஏன் இவை நடந்தன? ஏன் இந்த ருத்திர நர்தனம்? யார்விட்ட பிழை? யாரைப் பழிவாங்க? ஏன் இது ஒரு தேவையான தீமையா? ஆய்வு செய்யப்போகாதே! அதற்கு உனக்குத் தகுதியில்லை.
இவற்றைவிட்டு முள்ளிவாய்க்காலுக்கு வாருங்கள். வற்றாப்பளை அம்மனை சாட்சிக்கு இழுக்காதீர்கள். முள்ளிவாய்க்கால் அனர்த்தங்களுக்கு யார் பொறுப்பு? உங்கள் மனச்சாட்சியைக் கேளுங்கள், அதுக்கு நன்றாகத் தெரியும்! சரணடைந்து நின்ற 50,000 பேருக்குத் தெரிந்த உண்மை உங்களுக்கும் தெரியும் நண்பர்களே! நீங்களும் அங்கு இருந்துதான் வந்தீர்கள் என்பதால் உங்கள் மனச்சாட்சியை கேளுங்கள். இனி நான் என் கதைக்கு வருகிறேன் அதையும் கேளுங்கள்.
91 இல் புங்குடுதீவிலிருந்த 38,000 பேரில் அத்தனை பேரும் இரண்டு நாட்களுக்குள் யாழ்ப்பாணம் போய்விடவேண்டும் என்பதால் புங்குடுதீவு மக்கள் இடம்பெயரத் தொடங்கியிருந்தனர். சைக்கிள், கார், வான், என்று பலவகையான வாகனங்களில் பிள்ளை குட்டிகளோடும் மூட்டை முடிச்சுகளோடும் உயிர் வாழவேண்டுமென்ற வேட்கை கொண்ட மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். அப்படித்தான் போராளிகள் அறிவித்திருந்தனர். இன்றிரவோ அல்லது நாளை அதிகாலைக்குள்ளோ ஆமி புங்குடுதீவுக்குள் நுழைந்துவிடும். அதை அவர்களால் நினைத்தே பார்க்க முடியவில்லை. அவர்களின் கையில் சிக்கி சித்திரைவதைக்குள்ளாகி சாவதைவிட, எங்காவது உயிர்தப்பி வாழ்வதே மேல், என்ற பீதியின் ஓட்டம்.
“மாஸ்டர் நீங்கள் வெளிக்கிடவில்லையா? இதுதான் கடைசி வான். பிள்ளை குட்டிகளோடு நீங்க இங்க இருக்கிறது சரியில்லை. வெளிக்கிடுங்க.” என்று கடைசி வான்காரன் குரல் கொடுத்துவிட்டுப்போனான். புலி உறுப்பினர்களும் நான் அங்கே இருப்பதைக் கண்டு ஆத்திரமுற்று வெளிக்கிடுமாறு கட்டாயப்படுத்தினர். ஆகவே நான் இவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள புங்கிடுதீவு ஆலடிச்சந்தி வீட்டை விட்டு நான் பிறந்து வளர்ந்த என் தாய் வீட்டுக்குபோய் இருந்து கொண்டேன். அங்கேதான் எனது குருவின் அஸ்தியும் இருந்தது, அதனால் அதுவே ஆச்சிரமம் என்றும் அழைக்கப்பட்டது. அங்கே நானும் எனது குடும்பமும் 8,10,12,14 வயதுடைய நான்கு பிள்ளைகளோடு இருந்தோம். இன்னொரு குடும்பமும் பிள்ளைகளும் என்னை நம்பி அங்கு இருந்தது. எனது குருவின் அஸ்தி எனது பொறுப்பிலேயே அங்கு இருந்தது. அதை அங்கிருந்து வேறெங்கும் எடுத்து செல்ல எனக்கு அதிகாரம் இல்லை. அல்லது அதை அங்கே விட்டுவிட்டு ஓடுவது குருத்துரோகம் ஆகும். ஆகவே நான் என்னையும் எனது குடும்பத்தையும் பணயம்வைத்து கொலைவெறியோடு உள்நுழையும் ராணுவத்தை எதிர்கொள்ள இருந்தேன். அது நமது குருவையும் பரிசோதிப்பதாக இருந்தது.
திடீரென எல்லோரையும் பீதிக்குள்ளாக்குவதுபோல் வேட்டுச்சத்தங்கள் கேட்கத்தொடங்கின. கிறனேற் தாக்குதல்களின் சத்தம்வேறு. பெரும் வாகங்களின் உறுமல். நாய்கள் குரைக்கத்தொடங்கின.
ராணுவம் உள்நுழைந்து கொண்டிருந்தது. ஆச்சிரம அறைகுள்ளிருந்த ஒவ்வொருவர் இதயமும் கட்டுக்கங்காது பதறத்தொடங்கிற்று. நான் என்னோடு இருந்த பிள்ளைகளைப் பார்த்தேன். அவர்கள் அச்சத்தால் ‘திருதிரு’ வென ‘முழி’ த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்தவர்களின் மூச்சு என் உடலைச் சுட்டெரிப்பதுபோல் தகித்தது. ராணுவ வாகனங்களின் பேரிரைச்சல் மிக அருகே கேட்கத் தொடங்கிற்று.
எந்த நேரமும் ஆச்சிரமத்தின் பெரிய வெளிக்கதவு தட்டப்படலாம். அதை எதிர்பார்த்து ஒவ்வொரு வினாடியையும் எண்ணியவனாய் நான். ஆனால் திடுப்பென்று பேரமைதியொன்று கவிந்தது. வந்து கொண்டிருந்த ஆமிக்காரர்களின் அரவம் ஏன் அடங்கிப் போயிற்று? வந்து கொண்டிருந்தவர்கள் எங்கே போயினர்?
நான் வெளியே வந்து பார்த்தேன். தூரத்தே யாரோ ஒரு கிழவி கூக்குரல் வைப்பது கேட்டது. சிறிது நேரத்திற்கு பின் எனக்கு என்ன நடந்தது என்பது புரிந்தது. ஆச்சிரமத்திற்கு அருகே இருந்த சந்திக்கு வந்த ஆமிக்காரர் ஏதோ நினைத்துக் கொண்டவர்களாய் ஆச்சிரமத்தின் பின்பகுதியை கடந்துபோகும் ஒழுங்கை வழியே சென்று அதைக் கடந்து மீண்டும் பிரதான வழிக்குப்போய் ஏறினர்.
ஏன் அப்படிப் போயினர்? ஏன் வழியை மாற்றினர்? என் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. என் குருவின் முகம் என் முன்னே மிதந்து வந்தது.
அதன் பின்னர் மாலை, அங்கு எஞ்சியிருந்த அனைவரையும் மாரியம்மன் கோவிலில் கூடுமாறு ராணுவம் அழைத்திருந்தது. மாலை ஐந்து மணி படைத்தளபதி டென்சில் கோப்பேகடுவவின் தலைமையில் கூட்டம் நடந்தது. ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் அங்கு இருந்தனர். பிரஜைகள் குழு தலைமைப்பதவி எனக்கு கொடுக்கப்பட்டது. மக்கள் அச்சமில்லாமல் இருக்கலாம் என தளபதி உறுதிப்படுத்தினார். அதன் பின்னர் நான் தொட்ட எல்லாப் பொதுக் காரியங்களும் விறுவிறுவென நடந்து முடிந்தன.
புங்குடுதீவு கூட்டுறவுக் கடையில் இருந்த உணவுப் பொருட்களை ஈ.பி.டீ.பி உறுப்பினர்களின் மேற்பார்வையில் அங்கிருந்த மக்களுக்கு வாரா வாரம் நானும் எனது மனைவியும் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டோம். இந்த நிலவரம் ஏற்படுவதற்கு முந்திய சில மாதங்களுக்கு புங்குடுதீவு மக்கள் இலைக்கஞ்சி, பனாட்டு, ஓடியல்பிட்டு என்றவற்றிலேயே தங்கியிருந்தனர். நானோ இன்சுலின் ஏற்றுவதில் தங்கியிருந்த நிலையில் அது கிடைக்காமையால், மிகவும் பலவீனமுற்றிருந்ததால் நான் எனது குருவின் அஸ்திக்கு சென்று விளக்கேற்றுவது கடினமாக இருந்தது. எனது நிலைமை மோசமடைந்தபோது, நான் ஒரு நாள் சென்று விளக்கேற்றிவிட்டு, இனிமேல் நான் இங்கு வந்து விளக்கேற்றுவது முடியாது. நீங்கள் தான் என்னை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு நான் எனது ஆலடி வீட்டுக்கு வந்தபோது அங்கே ஒரு நேவி ட்றக் நின்று கொண்டிருந்தது. அதிலிருந்து இறங்கிய ஒரு நேவிக்காரன் என்னிடம் வந்து என்பேரைத் தெரிந்துகொண்ட பின் 12 இன்சுலின் வயல நிறைந்த பெட்டியைதந்து இதை உங்களிடம் கொடுக்குமாறு எங்கள் கப்டன் தந்தார் என்று கூறினான். எனக்கு கண்கள் கலங்கியது. உண்மையை நோக்கி ஒருவன் இயங்கும்போது பேரியல்பு கீழே இறங்கிவரத்தான் செய்யும், யாரோ சொல்வது போலிருந்தாலும் ஃபோன் வசதி எதுவும் இல்லாதிருந்த எனக்கு எப்படி இவை நடந்தன? எனக்கு இன்னும் புரியாமலே இருந்தன.
சில நாட்களுக்குப் பின்னர், உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரியாக கடமையாற்றிய எனது பல்கலைக்கழக நண்பன் பற்குணமும் வந்தார். அவன் என்னைக் கண்டதுமே கலகலப்பாக மாறினான். அவன் தீவுப்பகுதிக்குரிய AGA ஆக வேலை செய்கிறாயா? என்று கேட்டான். வேண்டாம் என்றேன். சரி ஒரு கிராமச் சேவகராவது இருக்கிறாயா என்றான், வேண்டாம் என்றேன். ஏன் EPDP நடத்தும் மக்கள் கடையை நிர்வாகம் செய்யும்படி கேட்டான், வேண்டாம் என்றேன். அப்போ நீ என்ன செய்யப்போகிறாய் என்றவன் கேட்டபோது, தீவுப்பகுதியில் எஞ்சியிருந்த 140 மாணவர்களுக்காக நமது புங்குடுதீவு மகாவித்தியாலயம் மீள இயக்கப்படுதல் தேவை என்றேன். அதில் ஏனைய ஆசிரியர்களோடு நானும் ஒருவனாக படிப்பிக்கிறேன் என்றேன். அது நிறைவேற்றப்பட்டது. அவற்றை நிறைவேற்றுவதில் ஈ.பி.டீ.பி உறுப்பினர் அன்புக்குரிய சீலன் பெரிதும் உதவினார்.
நான் கடைசியாகச் செய்தது, க.திருநாவுக்கரசு வால் அமைக்கப்பட்ட சர்வோதய நிலையத்தை, இராணுவம் தனது முகாமாக்கிக் கொள்ள முயன்றபோது என் நண்பர் சீலன் மூலம் அதை தடுத்து நிறுத்த முயன்றது வெற்றியாகவே முடிந்தது.
இங்கே இறுதியாக ஒன்று சொல்கிறேன்.
கோயில் என்பது உன்னை நீ பொது நன்மைக்காகத் தியாகம் செய்யத் தயாராகும்போது, அங்கே உன்னுள்ளேயே இறைவன் புகுந்து உன்னையே கோயிலாக்குகிறான். நான்கு வருடம் அடைபட்டு கிடந்த நான் புங்குடுதீவை விட்டு எனது குருவின் அஸ்தியோடு சென்றதன் பின் அந்த இடம் அனைத்தும் தலைகீழாக மாறிற்று.
நான் நமது ஆயுதப் போராட்டம் பற்றிக் கூறியவை எனது ‘சங்கிலியன் தரையில்’ காணலாம். கிழக்கு மாகாண இளைஞர்கள் தம் உயிரைக் கொடுத்துப் போராடியும் வடக்கு வீரர்களால் ஒதுக்கப்பட்டதும் நமது வீழ்ச்சிக்கு ஒரு காரணம். மற்றும் மக்கள் போராட்டம் பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. எனது சங்கிலியன் தரை நாவல் முதல் 50 பிரதிகள் அடிக்கப்பட்டு அதிலுள்ள அச்சுப் பிழைகள் காரணமாகவும் சில விடயங்கள் சேர்க்கப்படாமையாலும் விநியோகிக்கப்படாமல் மீளப்பெறப்பட்டு என்னால் அழிக்கப்பட்டன. சங்கிலியன் தரை இரண்டாம் பதிப்பே உண்மையானதாக விநியோகிக்கப்பட்டது. எம்.கே. முருகானந்தன், ஐ.சாந்தன், சட்டநாதன், திசேரா இவர்களிடம் எனது இரண்டாம் பதிப்பு உள்ளது. அ.யேசுராசாவும் அவரது சகாக்களும் எனது நிராகரிக்கப்பட்ட பிரதியை வைத்துக்கொண்டு விமர்சிப்பது போன்றவை இனி இடம்பெறாமல் இருக்கவே இதைச் சொல்கிறேன்.
மேலும் எனது புதிதாக வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பான ‘உருமாறும் உலகும் கருமாறும் காலமும்’ நூலைப் படிப்பது மேலும் பலவற்றை விளங்கிக்கொள்ள உதவியாக இருக்கும்.
#ஆன்மா #உரிமைப் போராட்டங்கள் #மு. பொ #நிலாந்தன் #ஈழத்தமிழர்கள் #கோயில்கள் #மதம்