Home இலங்கை 1956ல் இங்கினியாகலயில் ஆரம்பித்த ஈழத்தமிழர் படுகொலைகள்!

1956ல் இங்கினியாகலயில் ஆரம்பித்த ஈழத்தமிழர் படுகொலைகள்!

by admin

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

ஈழத் தமிழ் மக்களின் வரலாற்று நாட்காட்டியில் தினமும் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மரணங்களின் ஞாபகத்துயர் தீராத பக்கங்களே தென்படுகின்றன. 1983 ஜூலை இனப்படுகொலை உலகமே அதிர்ந்தவொரு படுகொலை. அத்துடன் அதற்கு முந்தைய மாதமான ஜீன் மாதமும் வரலாறு முழுவதும் பல இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளன. ஜூன் 10ஆம் நாளில் சிங்கள அரசு வரலாறு முழுவதும் நிகழ்த்திய சில இனப்படுகொலைகளை இப் பத்தி ஆராய்கின்றது.

அந்த வகையில் 1956ஆம் ஆண்டில் நடந்த அம்பாறை மாவட்ட இங்கினியாகல படுகொலை ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத இன்னொரு வடு. ஆனாலும் இந்தப் படுகொலை குறித்த பக்கங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அப் படுகொலையில் ஒன்றல்ல, இரண்டல்ல 150 தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். சிங்களப் பேரினவாதத்தின் கொடிய ஆதி முகத்தை இப் படுகொலை அம்பலம் செய்வதே இங்கு முக்கியமானது.

உண்மையில், சிங்கள பேரினவாத அரசின் இனப்படுகொலைகள், சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையில், ஈழத் தமிழ் இனத்தை அழித்து ஒழிக்கும் வகையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற நிலையில், கல்வியில் சிறந்திருந்த ஈழத் தமிழ் மக்களை ஒடுக்க தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் இனத்தை அழிப்பதற்கு இதுபோன்ற படுகொலைகளும் திட்டமிடப்பட்டன என்பது வரலாறு.

அத்துடன் சுதந்திர இலங்கையில் மாத்திரம் இதற்கான திட்டங்கள் தீட்டப்படவில்லை. இங்கினியாகலப் படுகொலையைப் பொறுத்தவரையிலும், 1940களிலேயே அதற்கான விதைகள் தூவப்பட்டுள்ளன. அக்கால கட்டத்தில் விவசாய அமைச்சராக பதவி வகித்த டி.எஸ். சேனநாயக்கா, தமிழர்களின் நிலங்களை சூறையாடும் முயற்சிகளில் ஈடுபட்டார். பிரித்தானியர் காலத்திலேயே இது ஆரம்பமானது.

இதன்போது கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் இலக்கு வைக்கப்பட்டன. அந்நியர்களின் ஆட்சியில் ஒன்றிணைக்கப்பட்ட நாடு, அவர்களின் வெளியேற்றத்தின் பின்னர், தமிழர்களிடம் சென்றுவிடக்கூடாது என்பதிலும், அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஆக்கிரமித்து விட வேண்டும் என்பதிலும் அன்றைய சிங்கள தலைவர்கள் குறியாக இருந்தனர். இன்றும் அதே நிலமைதான்.

இப்படி ஒரு சூழலில்தான், பிரித்தானிய அரசின் நிதி உதவியுடன், அம்பாறையில் கல்லோயா குடியேற்றத் திட்டமும், திருகோணமலையில் கந்தளாய் குடியேற்றத் திட்டமும் அல்லை குடியேற்றத் திட்டமும் டி.எஸ். சேனநாயக்காவினால் உருவாக்கப்பட்டது. தமிழர்களின் தாயகமான கிழக்கை சூறையாடவே இத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அப்போது அங்கே தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களுக்கும் அவை நன்மை பயக்கும் என்று கூறப்பட்டாலும் அவர்களை விரட்டி அருகில் உள்ள சிங்கள நிலங்களுடன் இணைப்பதே அன்றைய திட்டமாக இருந்தது.

இந்த நிலையில் 1956இல் நடந்த தேர்தலில் பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகினார். அவர் சிங்களப் பேரினவாத கோர முகத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஈழத் தமிழ் மக்களை ஒடுக்கும் விதமாக தனிச் சிங்களச் சட்டத்தை 1956 ஜீன் 5 அன்று நிறைவேற்றினார். இதனை அன்றைய தமிழரசுக் கட்சி எதிர்த்தது. தந்தை செல்வநாயகம் பாராளுமன்ற கட்டத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் தனிநாயகம் அடிகளாரும் கலந்து கொண்டார். இந்த ஜனநாயகப் போராட்டத்திற்கு எதிராக சிங்களவர்கள் செய்த அராஜகங்கள் ஈழத் தமிழ் இனப்படுகொலையாக நிகழந்தேறியது.

இலங்கையில் இனப்பகையை முதன் முதலில் ஏற்படுத்தியது தனிச் சிங்களச் சட்டமே. அத்துடன் ஈழத் தமிழ் தக்களின் தலைவர்கள் மற்றும் அறிவுஜீவிகள் முன்னெடுத்த போராட்டத்திற்கு எதிராக முதன் இனப்படுகொலை நடந்ததும் 1956இலேயே. கொழும்பிலும் தமிழர்களின் பகுதியிலும் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இலங்கைத் தீவு முழுவதும் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக பல படுகொலை சம்பவங்கள் நடைபெற்றன.

அம்பாறையின், இங்கினியாகல என்ற இடத்தில் கரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த தமிழ் மக்களை சிங்களக் காடையளர்கள் வெட்டிப் படுகொலை செய்தார்கள். ஏதுமறியாத அப்பாவி மக்கள் வெட்டி வீசப்பட்டார்கள். குறை உயிருடன் எரிந்தவர்கள், எரியும் தீயில் வீசப்பட்டார்கள். இலங்கை இன அழிப்பு முன் வரலாற்றில், இக்கினியாக்கலைப் படுகொலைதான் அதிக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு என்று அவசரகாலச் சட்டம் 1958 என்ற நூல் குறிப்பிடுகின்றது.

ஜூன் 10இல்தான் அம்பாறை இங்கினியாகல  இனப்படுகொலை நடந்தது. 1956இல் இப் படுகொலை நடந்திருந்தது. அதற்குப் பிந்தைய பல ஜூன் 10களில் ஈழத்தில் இனப்படுகொலைகள் நடைபெற்றுள்ளன. இதைப்போலவே 1986 ஆம் ஆண்டு, ஜூன் 10ஆம் நாள் மண்டைதீவுக் கடல் படுகொலைகள் சிங்கள அரச படைகளால் நிகழ்த்தப்பட்டது. யாழ்ப்பாணத்தின் மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம் நடைபெற்றது. இப்படுகொலைக்கும் இன்றுவரையில் நீதி இல்லை.

இதைப்போலவே 1998ஆம் ஆண்டு ஜூன் 10அன்று முல்லைத்தீவு, சுதந்திரபுரப் படுகொலை சிங்கள அரசால் நிகழ்த்தப்பட்டது. சுதந்திரபுறப் பகுதியில் சிங்கள அரசின் விமானங்கள் குண்டு வீசத் தாக்கியதில் அப்பாவித் தமிழ் மக்கள் 25க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதைப்போலவே, 2006ஆம் ஆண்டு ஜூன் 10நாளில், மன்னாரின் வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர்கள் சிங்கள அரசால் வன்புணர்ந்து இனப்படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களின் நாட்கள் முழுவதும் இனப்படுகொலைகள்.

ஈழத் தமிழ் மக்களின் வரலாறு முழுவதும் இனப்படுகொலைகள்தான். உண்மையில் சிங்கள அரசின் இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் மாத்திரம் நிகழவில்லை என்பற்கும் முள்ளிவாய்க்காலுடன் நின்றுவிடவில்லை என்பதற்கும் இவை வெகு சில உதாரணங்கள்தான். இப்படி இனப்படுகொலை செய்த ஒரு அரசை உலகம் மயிலிறகால் தடவுகின்றது. சிங்கள அரசும் இந்த உலகத்திற்கு வாய்கூசாமல் மனித உரிமைப் பாடத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது. #InginiyagalaSriLanka #தீபச்செல்வன் #சிங்களபேரினவாதஅரசு #ஈழத்தமிழ்மக்கள் #அம்பாறை #இங்கினியாகல

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More