உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதி சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டில் இந்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான முகமது அசாருதீன் என்பவரே இவ்வாறு இந்தியாவில் கோவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் குறித்து இந்தியா விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்தியாவின் என்.ஐ.ஏ. அமைப்பின் அதிகாரிகள் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்த இந்தியர்கள் குறித்தும் அறிந்து கொண்டனர். குறிப்பாக கோவையில் சிலருடன் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்தது முகப்புத்தக தொடர்புகள் மூலம் அறிந்து கொண்டனர்.
அத்துடன், கோவையில் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் நெருக்கமாக இருப்பவர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அனுதாபிகளாக இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. ஐ.எஸ். தீவிரவாதத்தின் கொள்கைகளை பரப்பும் வகையில் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிம் சில தடவைகள் கோவை சென்றிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலேயே, கோவையில் 7 இடங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #உயிர்த்தஞாயிறு #தற்கொலைக்குண்டுதாக்குதல் #கோவை #சஹ்ரான்ஹாஷிம் #முகமது அசாருதீன் #ஐஎஸ்