நிபந்தனையற்ற ஆதரவின் மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையினால் பொத்திப் பொத்தி பாதுகாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், அரசியல் தீர்வையும் காணவில்லை. தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் முன்வரவில்லை.
ஏற்கனவே தமிழ் மக்களை உள்ளாக்கியிருந்த இந்த நிலைமை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையை மனக்கசப்புக்கும் வெறுப்புக்கும் ஆளாக்கி இருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிக் கெட்ட சூழலில் இருந்து எவ்வாறு வெளிவருவது என்று கூட்டமைப்பின் தலைமை தத்தளித்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது. இந்த நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை கூட்டமைப்புக்கு ஒரு நம்பிக்கை ஒளியைத் தந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டிய மகிந்த ராஜபக்ச அரசு யுத்த வெற்றி மோகத்தில் திளைத்து, இராணுவத்தை முதன்மைப்படுத்தி, எதேச்சதிகாரப் போக்கில் பயணித்திருந்தது. இராணுவ மயப்படுத்தப்பட்ட அந்த ஆட்சிக்கு முடிவுகட்டி, ஜனநாயகத்தைப் பாதுகாத்து, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்காகக் கொண்டு வரப்பட்ட நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று தமிழ்த்தேசிய கூட்டமமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் உருவாக்கத்தில் அதிமுக்கிய தூண்களாக விளங்கியவர்களில் ஒருவாகிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், மனம் கசந்த நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்ததன் மூலம் பெரிய தவறிழைத்துவிட்டதாகவும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
கவலையளிக்கும் நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தேசிய கூட்டமமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்னும் ஒரு படி மேலே சென்று நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பேற்று பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக ஐநா மனித உரிமைப் பேரவையின் மூன்று தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றவதாக உறுதியளித்த நல்லாட்சி அராசங்கம் அவற்றை உதாசீனம் செய்து புறக்கணித்துச் செயற்பட்டு வருவதாக சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐநா உதவிச் செயலாளர் நாயகமும், ஐநா பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத ஒழிப்புக்கான நிறைவேற்றுக் குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளருமாகிய மிச்சேல் கொனின்ஸ் அம்மையாரிடமே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐநா தீர்மானங்களையும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தையும் நிறைவேற்றுவதில் அரசாங்கம் கொண்டிருக்கின்ற பொறுப்பற்ற போக்கு, அரசு வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுவதையே காட்டுகின்றது என்றும் மிச்சேல் கொனின்ஸ் அம்மையாரிடம் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நிலைமை எங்களுக்குக் கவலை அளிக்கின்றது, இது இந்த நாட்டுக்கு நல்லதல்ல. குறிப்பாக ஐநா மன்றத்திற்கும் நல்லதல்ல. ஓர் அரசாங்கம் தான் நினைக்கின்ற எதனையும் சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்த பின்னர், அதனை முற்றிலும் புறக்கணித்து, தான் விரும்பியவாறு செயற்படுமானால், அத்தகைய செயற்பாடுகள் ஐநா மன்றம் Nபுhன்ற நிறுவனங்களின் இருப்பையும் அவற்றின் தேவைகளையும் கேள்விக்கு உள்ளாக்கிவிடும் என்றும் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.
போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுபு;பு கூற வேண்டும் என்று அமெரிக்காவினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்ட 30-1 தீர்மானத்தை தாமதமின்றி செயற்படுத்துவதற்கான தூண்டுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் கைவிட்டு, அரசாங்;கத்திற்கு அடுத்தடுத்து கால அவகாசம் வழங்குவதிலேயே கூட்டமைப்பின் தலைமை ஆர்வமாக இருந்தது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கின்ற ஒரு போக்கில் செல்கின்ற அரசாங்கத்திற்கு அனுசரணை வழங்கக் கூடாது என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் பாதிக்கப்பட்ட மக்களும் வலியுறுத்திக் கூறிய போதிலும், அதனை கூட்டமைப்பின் தலைமை புறந்தள்ளிச் செயற்பட்டிருந்தது.
இந்தச் செயற்பாட்டின் விளைவை நிதர்சனமாக உணர்ந்திருப்பதன் வெளிப்பாடாகவே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் கருத்துக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
தவறுக்கு மேல் தவறா………?
அரசாங்கத்தின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை பெரும்பான்மையான தமிழ் மககளின் ஏகோபித்த அரசியல் தலைமை என்ற அந்தஸ்தையும் கௌரவத்தையும் மரியாதையையும் பெற்றிருந்தது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலையில் இந்த அரசியல் பொறுப்பை ஏற்றிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான இராஜதந்திர வழிகளில் மக்களை வழிநடத்தியதா என்பது கேள்விக்குரியது.
மக்களை வழிநடத்தியதா என்பது ஒரு புறமிருக்க சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களிடம் இனவாத விரோதப் போக்கைக் கொண்ட இலங்கை ஆட்சியாளர்களை சரியான வழி முறையில் கையாள முடிந்ததா என்பதும் கேள்விக்குரியதாகும்.
அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் என்ற யுத்தத்தை, பயங்கரவாதமாகச் சித்தரித்து, மன்pத உரிமை மீறல்களிலும் போர்க்குற்றச் செயற்பாடுகளிலும் நிகரற்ற முறையில் செயற்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பரசியலை முன்னெடுத்திருந்தது.
ஆட்சி மாற்றத்தின்போது நல்லாட்சி அரசாங்கம் உருவாகுவதற்க உடனிருந்து உறுதியாகச் செயற்பட்டு, இணக்க அரசியலில் கூட்டமைப்பு ஈ:டுபட்டிருந்தது. எதிர்ப்பரசியலிலும்சரி, இணக்கமுறை அரசியலிலும்சரி, ஆட்சியாளர்களை அரசியல் தீர்வை நோக்கி கூட்டமைப்பினால் நகர்த்திச் செல்ல முடியவில்லை. அன்றாடப் பிரச்சினைகளுக்கும் எரியும் பிரச்சினைகளாக மாறியுள்ள ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்குரிய வழி முறைகளில் ஆட்சியாளர்களை ஈடுபடச் செய்ய முடியவில்லை.
யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான மாகாண சபைகளின் நிர்வாகச் செயற்பாடுகளின் ஊடாகவும் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகளுக்குத் திர்வு காண முடியவில்லை.
மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டிருந்தபோதிலும், பெரும்பான்மை அரசியல் பலத்தைக் கொண்டிருந்த வடமாகாண சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய அபிவிருத்திச் செயற்பாடுகளிலும் கருத்தூன்றிச் செயற்பட முடியாத நிலைமையே நிலவியது
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்றதுபோல, காலம் கடந்த நிலையில் வடமாகாண சபையின் திறமான செயற்பாடுகளுக்காக மாகாண முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனைக் கொண்டு வந்தது தவறு என கழிவிரக்கத்துடன் கருத்துரைக்கவே முடிந்திருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முழுமையான ஆளுகைக்கு உட்பட்டிருந்த வடமாகாண சபையை சரியான வழித்தடத்தில் கொண்டு நடத்தியிருக்கக் கூடியதாக இருந்த போதிலும், அதனை கூட்டமைப்பினால் செய்ய முடியாமல் போனது. அரசியலில் உள்ளகச் செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியாமல் போனது போலவே, புற அரசியல் செயற்பாடாகிய நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, அரசாங்கத்தின் நலன்களைப் பாதுகாத்ததன் மூலமும், தமிழ் மக்களுக்கான இலக்குகளை அடைய முடியாமல் போய்விட்டது,
இதனால், இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்து தவறிழைத்துவிட்டோம் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கழிவிரக்கத்துடன் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியதன் மூலம் தமிழ் மக்களும் தவறிழைத்துவிட்டார்கள் என்று அவர் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். இதன் மூலம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் ரீதியான இயலாமை அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கின்றது.
முஸ்லிம்களின் முன்மாதிரியான நகர்வு
விடுதலைப்புலிகளின் இராணுவ ரீதியான மறைவையடுத்து, தமிழ் மக்களின் அரசியல் தலைமைப் பொறுப்பை ஏற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல கட்சிகளின் ஒற்றுமையுடன் கூடிய வலுவானதோர் அரசியல் சக்தியாக மிளிர்ந்தது. தமிழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள் கூட்டமைப்பின் பின்னால் மிகுந்த நம்பிக்கையுடன் அணி திரண்டிருந்தார்கள்.
ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை உறுதியானதோர் அரசியல் கட்டமைப்புக்குள் வைத்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கூட்டமைப்பின் தலைமை தவறிவிட்டது, நாளுக்கு நாள் கூட்டமைப்பின் உள்ளே கருத்து முரண்பாடுகளும், செயல் முரண்பாடுகளும் வளர்ந்தனவேயொழிய அது ஓர் இறுக்கமான அரசியல் இயக்கமாகக் கட்டியெழுப்பப்படவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த தமிழரசுக் கட்சி அந்தப் பொறுப்பின் ஊடாக கட்சி அரசியலை வளர்த்தெடுப்பதிலும், அதன் ஊடாக கூட்டமைப்பின் உள்ளே தேர்தல் அரசியலுக்கான கட்சி நலன்களை மேம்படுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தியதே அல்லாமல் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலம் தமிழ் மக்களை ஓரணியில் வைத்திருக்க முடியாமல் போய்விட்டது.
புங்காளிக்கட்சிகளிடையே எழுந்த உள்ளக முரண்பாடுகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை, கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய நிலைமைக்கே கொண்டு சென்றுள்ளது. முதலில் தமிழ்க் காங்கிரஸ் பிரிந்து சென்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கியது. பின்னர், ஈபிஆர்எல்எவ் பிரிந்து சென்று, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலுக்காக உருவாக்கிய தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கலைந்து போனது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியின் தலைமையில் டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளே அங்கம் வகிக்கின்றன. கூட்டமைப்பின் தலைவரும் பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்தவருமாகிய இரா.சம்பந்தன் காலத்துக்குக் காலம் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு தமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். அந்த ஒற்றுமையை இறுக்கமாகப் பேண வேண்டும் என அடிக்கடி வலியுறுத்தி வருகின்ற போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உள்ளே பங்காளிக் கட்சிகளை இறுக்கமாகப் பிணைத்து ஒற்றுமையைப் பேணுவதற்கு முடியாமல் போயுள்ளது. இந்த நிலைமை ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்ல என்பதைப் போலுள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல தமிழ் அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி உறுதியான ஒன்றிணைந்ததோர் அரசியல் சக்தியாக மாற வேண்டியது காலத்தின் தேவையாகும். கருத்து முரண்பாடுகள் அரசியல் வழிக் கொள்கைகள் என்பவற்றுக்கு அப்பால் ஒன்றிணைந்த ஒற்றுமையின் மூலம் காரியங்களை எதிர்ப்புக்களை முறியடிக்க முடியும். காரியங்களைச் சாதிக்க முடியும் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்ததன் மூலம் எடுத்தியம்பியுள்ளார்கள்.
அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம் தலைவர்களின் அரசியல் நகர்வை முன்மாதிரியாகக் கொண்டாவது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அடுத்த கட்டம்
ஜனநாயகத்தை நிலைநிறுத்தி நல்லாட்சியைக் கொண்டு நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட மைத்திரி – ரணில் இணைந்த அரசாங்கமானது, 2018 அக்டோபர் அரசியல் சதிப்புரட்சியைத் தொடர்ந்து ஸ்திரமற்ற ஒரு நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. உய்pர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நிலைமைகளை மேலும் மோசமாக்கியுள்ளது. அரச தலைவராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கேலிக் கூத்தான சில நடவடிக்கைகள் அரசியல் ஸ்திரத்தன்மையை மேலும் மேலும் மோசமாக்கியுள்ளது.
இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதன் ஊடாக அரசியல் தீர்வு காணலாம். பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம் என்ற தமிழர் தரப்பின் நம்பிக்கை சிதறுண்டு போயுள்ளது.
ஆனாலும், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இந்திய அரசின் அணுகுமுறையில் தென்படத் தொடங்கியுள்ள மாற்றங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சிலவற்றையாவது தீர்ப்பதற்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கை ஒளிக் கீற்றைத் தோற்றுவித்துள்ளது,
இரண்டாவது தடவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றுள்ள நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குக் கிட்டியிருந்தது. அந்த வாய்ப்பின்போது அரசியல் தீர்வு உள்ளிட்ட பல விடயங்களை அவருக்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எடுத்துரைத்ததையடுத்து, பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காகக் கூட்டமைப்பினரை இந்தியாவுக்கு வருமாறு அவர் அழைத்துள்ளார்.
அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி முடங்கியதையடுத்து, தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு முயற்சிகளும் முடக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்களின் பிரச்சினைகளில் காட்டியுள்ள ஆர்வம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வாயில் ஒன்றைத் திறந்துள்ளதாக நம்பப்படுகின்றது. ஆதரவுடன் தீர்வை வென்றெடுப்போம் என்று சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையிலான முயற்சிகள் முன்னைய நடவடிக்கைகளைப் போலல்லாமல் சமயோசிதமாகவும் இராஜதந்திரத்துடனும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான தயாரிப்புக்களுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.a