காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்காது தமிழரசு கட்சி பாராமன்ற உறுப்பினர்கள் சென்றனர். தமிழரசு கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குறித்த மாநாடு நடைபெற்றுக்கொண்டு இருந்த வேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் வவுனியாவில் இருந்து வந்து மாநாடு நடைபெற்ற மண்டபத்திற்கு வெளியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ் வந்து போராட்டத்தில் ஈடுபட போகின்றார்கள் எனும் தகவல் முன்னதாகவே தமிழரசு கட்சியின் உயர் பீடத்திற்கு கிடைத்துள்ளது. அதனை அடுத்து அவர்கள் மாநாட்டு மண்டபத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கோரி இருந்தார்கள்.
அதன் அடிப்படையில் வீரசிங்கம் மண்டபத்திற்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்நிலையில் மதியம் 12 மணியளவில் வவுனியாவில் இருந்து வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மண்டபத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் சுமார் இரண்டு மணி நேரம் மதிய வெயிலையும் பொருட்படுத்தாது முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் எவரும் பேச்சுக்கு வரவில்லை. மண்டபத்திற்குள் அழைத்து பேசவும் இல்லை.
மாநாடு முடிவடைந்ததும் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் , மாவை சேனாதிராஜா , எம்.ஏ . சுமந்திரன், சி.சிறிதரன் உள்ளிட்டபாராமன்ற உறுப்பினர்கள் , கட்சி பிரமுகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் எந்த வித பேச்சுக்களும் நடத்தது அங்கிருந்து சென்றிருந்தனர்.
பாராமன்ற உறுப்பினர்களின் அத்தகைய செயற்பாடுகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருந்தது. அது தொடர்பில் ஒருவர் தெரிவிக்கையில் ,
நாம் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பி இருந்தோம். எமக்கு தீர்வினை பெற்று தருவார்கள் என்று காணாமல் போன எம் உறவுகளை தேடி கடந்த பத்து வருடங்களாக போராடி வருகின்றோம் எமக்கு எந்த தீர்வும் கிடைக்க வில்லை. ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் . அரசியல் கைதி விடயத்திலும் கவனம் செலுத்தி தீர்வினை பெற்று தருவோம் என வாக்களிக்கின்றனர். தேர்தலின் பின்னர் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் தொடர்பிலான தகவல்களை வெளியிட கோரி போராட்டம் நடத்தினோம். உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது எமது உடல் நலத்தையும் பொருட்படுத்தாது போராடினோம். ஆனால் நாம் வாக்களித்து பாராமன்றுக்கு சென்றவர்கள் அதி சொகுசு வாகனத்தில் வந்து மாநாடு நடாத்தி விட்டு எம்மை பற்றி எந்த கரிசனையும் இல்லாது தமது சொகுசு வாகனத்தில் ஏறி செல்கின்றனர்.
இவர்களின் எவ்வாறான செயற்பாடுகள் எமக்கு மேலும் மன வருத்தததையே தருகின்றது. எமக்கு ஆறுதல் வார்த்தைகளை கூட சொல்லி செல்ல கூட அவர்களுக்கு தோன்றவில்லை என கவலையுடன் தெரிவித்தார். #காணாமல் ஆக்கப்பட்டவர்களின் #உறவினர்களின் #தமிழரசு #இரா.சம்பந்தன் #மாவை சேனாதிராஜா # எம்.ஏ . சுமந்திரன்,
1 comment
“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறிப்பாகப் போர்க் காலத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், உறவினரால் கையளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில் வழங்க வேண்டிய பொறுப்பு இன்றைய அரசுக்கும் உண்டு. ஐ.நா.மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தால் நிறுவப்பட்ட விசாரணைக்குழுவின் நடவடிக்கைகள் மீது பாதிக்கப்பட்டவர்களுக்கும் மக்களுக்கும் நம்பகத்தன்மை ஏற்படும் வகையில் சிபார்சுகளும், நடவடிக்கைகளும் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இப் பிரச்சனையை காலம் தாழ்த்தாமல் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று மாநாட்டில் நாலாவது தீர்மானமாக எடுத்துவிட்டு”
“மாநாடு முடிவடைந்ததும், காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் வாக்களித்து, பாராமன்றுக்கு சென்ற தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், சி.சிறிதரன் உள்ளிட்டபாராமன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள் அவர்களுடன் எந்த வித பேச்சுக்களும் நடத்தாது, எந்த கரிசனையும் இல்லாது, ஆறுதல் வார்த்தைகளை கூட சொல்லாது தமது சொகுசு வாகனத்தில் ஏறி அங்கிருந்து சென்றிருந்தனர்”.
இந்த வகை செயல்களால், கடந்த தேர்தலில் 176000 க்கும் மேற்பட்ட வாக்குகளை இழந்த தமிழரசுக் கட்சி எதிர்கால தேர்தல்களில் மேலும் வாக்குகளை இழக்கும்.