கன்னியா வெந்நீரூற்று தொடர்பில் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் எழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று (29.819) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கன்னியா வெந்நீரூற்று தொடர்பிலான வாதப்பிரதிவாதங்களை இருசாராரும் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கும் மேலாக முன்வைத்தனர். வழக்கில் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பிரசாந்தினி உதயகுமார் மற்றும் கே.சயந்தன் ஆகியோர் முன்னிலையாகினர். பிரதிவாதி சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்றுவும் அரச தரப்பு சட்டத்தரணி சாருக்க ஏக்கநாயக்க மற்றும் பிரிந்தா குணரத்னம் ஆகியோர் முன்னிலையாகினர்.
இதன்போது பிரதிவாதி சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்று குறித்த இடைக்கால தடை உத்தரவுக்கான ஆட்சேபனையை தெரிவித்தார். அத்துடன் நீதிமன்றத்துக்கு குறித்த வழக்கை விசாரிப்பதற்கு உரிமை இல்லை எனவும் தெரிவித்து ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்ய தவணையை கோரினார்.
இதன்போது மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனும் குறித்த ஆட்சேபனைக்கான எதிர் ஆட்சேபனை மற்றும் எதிர் சத்தியக் கூற்று ஆகியவற்றை சமர்ப்பிப்பதற்கு தவணை கோரியுள்ளார். இந்த நிலையில், திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று தொடர்பில் வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் எழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.