169
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப்பிரசுர விநியோக விழிப்புணர்வு பயணம் இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்.பிரதான வீதியில் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் உள்ள கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து இவ் விழிப்புணர்வு நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நவம்பர் 2ஆம் திகதி, அனுஸ்டிக்கப்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் பொருட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அஞ்சலி நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் விழிப்புணர்வு பயணத்தில ஊடகவியலாளர்கள் முதலில், புத்தூர் பகுதியில் உள்ள சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ரவிமர்மனின் வீட்டிற்கு சென்று அவர்களின் உறவினர்களிடம் துண்டுப்பிரசுரத்தை வழங்கியிருந்தனர்.
இதன் பின்னர் சாவகச்சேரி நகரப்பகுதியிலும், அதனை தொடர்ந்து, கொடிகாமம், நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு ஆகிய பகுதிகளுக்கு சென்று கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்களை பொது மக்களிடம் கையளித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 6 ஆம் திகதி வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் இவ் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. #படுகொலை #ஊடகவியலாளர்களுக்கு #நீதி #விழிப்புணர்வு #பயணம்
Spread the love