Home இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை….

ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை….

by admin

11.11.2019


பேரவையால் தொடக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சுயாதீனக் குழு எனப்படுவது தமிழ் அரசியலின் மீதும் தமிழ்க் கட்சித் தலைமைகளின் மீதும் சிவில் சமூகங்களின் தார்மீகத் தலையீட்டை குறிக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் எனப்படுவது முழு நாட்டுக்குமானது. இதில் தமிழ் முஸ்லிம் வாக்குகள் தீர்மானிக்கும் வாக்குகளாக காணப்படுவதை சுயாதீனக் குழு அவதானித்தது.

தென்னிலங்கையில் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதனைத் தீர்மானிக்க முற்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரப்புக்கள் தமிழ்த் தரப்போடு தொடர்ந்து இடையூடாடி வருவதை சுயாதீனக் குழு கவனத்தில் எடுத்தது.
எனவே தமிழ் மக்கள் தமது பேரத்தை உயர்வாகப் பேணி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரப்புக்களோடு பேரம் பேசும் ஒரு களமாக ஜனாதிபதித் தேர்தலை கையாள வேண்டும் என்று சுயாதீனக்குழு விரும்பியது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பேரத்தை பிரயோகிப்பதற்கு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரே இருப்பவற்றுள் பொருத்தமான உச்சமான தெரிவு என்று சுயாதீனக் குழு முடிவெடுத்தது. அவ்வாறு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்றால் அதற்கு தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஒரு பொதுக்கருத்து எட்டப்பட வேண்டும் என்றும் குழு தீர்மானித்தது.
ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் எனப்படுபவர் ஒரு குறியீடு. அவர் தமிழ் மக்களின் இலட்சியங்களின் குறியீடு. தமிழ் மக்கள் ஒரு தேசமாகச் சிந்திக்கிறார்கள் என்பதன் குறியீடு. தமிழ் மக்கள் பேரம் பேசத் தயாராகிவிட்டார்கள் என்பதன் குறியீடு. தமிழ் ஐக்கியத்தின் குறியீடு.
ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் அவர் தமிழ் மக்களின் முதலாவது விருப்பு வாக்கைப் பெறுவார். அவ்வாறு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரும் ஜே.வி.பி யும் தமிழ் சிங்கள வாக்குகளை கொத்தாக வெட்டி எடுக்கும் போது இரண்டு பிரதான வேட்பாளர்களும் 50 வீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெறுவது சில சமயம் சவால்களுக்கு உள்ளாகலாம். அப்பொழுது இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணப்படும். இதில் தமிழ் மக்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கை தந்திரோபாயமாக சிந்தித்து யாருக்கு வழங்குகிறார்களோ அந்தப் பிரதான வேட்பாளருக்கே வெற்றி வாய்புக்கள் அதிகமிருக்கும். அதாவது முதலாவது விருப்பு வாக்கு தமிழ்க் கொள்கைக்கு. இரண்டாவது விருப்பு வாக்கு பேரம் பேசலுக்கு.
இதுதான் பொதுத் தமிழ் வேட்பாளர். இக் கோரிக்கையை முன்வைத்து கட்சிகளை ஒருங்கிணைக்கும் அனுசரணைப் பணியை சுயாதீனக்குழு முன்னெடுத்தது.
முதலில் இக்குழு தமிழத் தேசியக் கூட்டமைப்பை சந்தித்தது. அதன் தலைவர் திரு.சம்பந்தர் குழுவின் யோசனையை உதாசீனம் செய்யவில்லை என்று கூறினார். கட்சித் தலைவர்களோடும் தொண்டர்களோடும் பேசி முடிவெடுத்த பின் தமது முடிவை கூறுவதாகச் சொன்னார.; பொதுத்தமிழ் வேட்பாளராக தான் களமிறங்கத் தயாரில்லை என்றும் அவர் கூறினார்.
அதன்பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை குழு சந்தித்தது. அவர்கள் பொதுத் தமிழ் வேட்பாளரை எடுத்த எடுப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக தேர்தல் புறக்கணிப்பை தமது முதல் தெரிவாக அவர்கள் முன்வைத்தார்கள்.
அதன்பின் தமிழ் மக்கள் கூட்டணியை குழு சந்தித்தது. நீண்ட உரையாடலின் பின் பொதுத் தமிழ் வேட்பாளரை அக்கட்சி ஏற்றுக்கொண்டது. எனினும் விக்னேஸ்வரன் அப்படி ஒரு வேட்பாளராக களமிறங்குவதற்கு மறுத்துவிட்டார். அதேசமயம் திரு சம்பந்தர் களமிறக்கப்பட்டால் அதைத்தான் ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.
அதன்பின் ஈபி.ஆர்.எல்.எப் கட்சியைக் குழு சந்தித்தது. அதன் தலைவர் திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் பொதுத்தமிழ் வேட்பாளரை ஏற்பதற்குத் தயங்கினார். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களோடு முதல் நிலைக் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவது கடினம் என்றும் எனவே உடனடிப் பிரச்சினைகளை முன்வைத்து பேசவேண்டும் என்றும் அபிப்பிராயப்பட்டார்.
அதன்பின் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தைக் குழு சந்தித்தது. அதன் தலைவர் திரு ஐங்கரநேசன் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை உடனடியாக ஏற்றுக் கொண்டார். அந்த வேட்பாளருக்கு தமது கட்சி முழுமனதோடு உழைக்கும் என்றும் உறுதியளித்தார்.
அதன்பின் திருமதி.அனந்தி சசிதரன். அவரும் பொது வேட்பாளரை ஏற்றுக்கொண்டார். திரு.சிவாஜிலிங்கம் சில சமயம் போட்டியிடக் கூடும் என்றும் ஊகம் தெரிவித்தார்.
அதன்பின் தமிழரசுக் கட்சி. அக்கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராஜா தனது கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின் முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.
அதன்பின் புளட் அமைப்பின் தலைவர் திரு. சித்தார்த்தன். அவரும் பொது வேட்பாளரை ஏற்றுக்கொண்டார.; ஆனால் காலம் பிந்திவிட்டது என்று சொன்னார். அதன்பின் டெலோ அமைப்பின் செயலாளர் திரு.சிறீகாந்தா. அவரும் பொது வேட்பாளரை ஏற்றுக்கொண்டார். ஆனால் காலம் பிந்தி விட்டது என்ற ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு சாட்டை எல்லா கட்சிகளும் முன்வைக்கும் என்று சொன்னார்.
இவ்வாறு கட்சித் தலைமைகளோடு பேசி ஒரு பொது உடன்பாட்டுக்கு வரும் முதல் முயற்சியில் சுயாதீனக் குழு ஓரளவுக்கு முன்னேறியிருந்த பின்னணியில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை கட்சிகளுக்குள் இருந்தும் கட்சிகளுக்கு வெளியே இருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. கட்சிகளுக்கு வெளியே ஒருவரை கண்டு பிடிப்பதென்றால் அவர் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்.
இவ்வாறான ஒரு பின்னணியில்தான் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தனது முயற்சியை ஆரம்பித்தார்கள். அதே காலப்பகுதியில் திரு. சிவாஜிலிங்கம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
ஒரு பொதுத் தமிழ் வேட்ப்பாளரைக் கண்டு பிடிக்க முடியாத ஒரு சூழலில் அடுத்த கட்டமாக எல்லாக் காட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு பொது உடன்பாடுக்குக் கொண்டு வந்து ஒரு பொதுப் பேரம் பேசும் ஆவணத்தைத் தயாரிப்பதே சுயாதீனக் குழுவின் அடுத்த கட்டத் திட்டமாயிருந்தது. ஆனால் பல்கலைக் கழக மாணவர்கள் இடையில் நுழைந்தார்கள். சுயாதீனக் குழு திடமிட்டிருந்த அடுத்த கட்ட நகர்வை அவர்கள் முன்னெடுத்தார்கள். அதன் விளைவாக ஐந்து கட்சிகளின் கூட்டும் ஒரு பொது ஆவணமும் உருவாக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது அக்கூட்டு சிதைந்து விட்டது. அதன் சிதைவைத் தடுக்க மாணவர்களால் முடியவில்லை.
பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட முயற்சிகளில் சுயாதீனக் குழு உத்தியோகப்பற்றற்ற விதத்தில் பங்குபற்றியது. ஆனால் ஐந்து கட்சிகளின் கூட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு பொதுக் கருத்தை எட்டுவதற்கு எல்லாக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே அக்குழுவின் நிலைப்பாடாக இருந்தது.
இப்போதுள்ள நிலமைகளின்படி தமிழ்த் தேசிய கட்சிகள் மத்தியில் நான்கு வேறு நிலைப்பாடுகள் உண்டு. முதலாவது – பொதுத் தமிழ் வேட்பாளர் (அதாவது இரண்டாவது விருப்பு வாக்கை ஒரு பிரதான வேட்பாளருக்கு நிபந்தனையுடன் வழங்குவது), இரண்டாவது – தேர்தலைப் புறக்கணிப்பது, மூன்றாவது – சஜித்தை நிபந்தனையின்றி ஆதரிப்பது, நாலாவது – தமிழ் மக்களைத் தாமாக முடிவெடுக்க விடுவது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஒரு பொதுத் தமிழ் கருத்தை உருவாக்க முடியவில்லை. எனவே தமிழ்ப் பேரத்தையும் முழுமையாக பிரயோகிப்பது கடினம்.
ஒரு பொதுத் தமிழ் வேட்ப்பாளரே சுயாதீனக் குழுவின் கொள்கைத் தெரிவு. அதற்கு ஒப்பீட்டளவில் ஆகக்கூடியபட்சம் பொருத்தமான ஓர் ஒற்றுமை அவசியம். அவ்வாறு ஒப்பீட்டளவில் ஆகக்கூடுதலான தமிழ்த் தேசியக் கட்சிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தமிழ் வேட்ப்பாளருக்கு தமிழ் மக்கள் தமது முதல் விருப்பு வாக்கையும் இரண்டாவது விருப்பு வாக்கை தந்திரோபாயமாகச் சிந்தித்தும் வழங்கலாம்.
கொள்கை அடித்தளம் இல்லாமல் கட்சிகளை ஒருங்கிணைப்பது தற்காலிகமானது செயற்கையானது என்று சுயாதீனக் குழு நம்புகிறது. தலைவர்களையும் வாக்காளர்களையும் நீண்ட கால நோக்கில் பண்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவசியத்தையும் சமூகப் பொறுப்பையும் சுயாதீனக் குழு ஏற்றுக்கொள்கிறது. தமிழ் அரசியலில் சிவில் சமூகங்கள் தலையிடுவது என்பது தமிழ் ஜனநாயகத்தை மேலும் செழிப்பாக்கும். இனிவரும் காலங்களில் தமிழ் அரசியலின் மீதும் கட்சிகளின் மீதும் அதிகரித்த தார்மீகத் தலையீட்டைச் செய்வதற்கு தேவையான வளர்ச்சியைத் தமிழ் சிவில் சமூகங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும். #ஜனாதிபதிதேர்தல்  #தமிழ் #சுயாதீனக்குழு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More