நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மூலம் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்திற்கு உள்வாங்கப்பட்ட பௌசி ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து செயற்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் முன்னாள் ஜனாதிபதியும் கட்சி தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடிய போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூலம் தேசிய பட்டியலுக்கூடாக நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்பட்டு ஏனைய கட்சிகளில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல் , பொதுத்தேர்தலுக்கு தயாராகுதல் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.
ஏ.எச்.எம்.பௌசி, விஜித் விஜயமுனி சொய்சா , டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோரை சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டிருந்த போதிலும், பௌசி முன்னிலையாகாததன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்
இதேவேளை தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள நாடாளுளுமன்ற உறுப்பினர் எச்.எம். பௌசி அவ்வாறு இடம்பெற்றால் அதற்கெதிராக சட்ட ரீதியிலாக நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்காகவே இவ்வாறு தனக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #பௌசி #ஸ்ரீலங்காசுதந்திரகட்சி #நீக்கம் #மைத்திரிபால