293
காய்ச்சல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அரச வைத்திய சாலைகளில் அல்லது தகுதி வாய்ந்த வைத்திய அதிகாரி ஒருவரிடம் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் டெங்கு அபாயம் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை இன்றைய தினம் வியாழக்கிழமை விழிர்ப்புணர்வு துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
உங்களுடைய கிராமங்களில் டெங்கு குருதிப்பெருக்கு நோய் மீண்டும் தீவிரமாக பரவி வருகின்றது.எனவே உங்கள் வீடுகள்,நிறுவனங்கள்,பொது இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் மிக முக்கியமான இடங்களான நீர் சேமித்து வைக்கும் தொட்டி, மலசல கூட பாவனைக்கு நீர் சேமித்து வைக்கும் தொட்டி அல்லது வாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனுடன் சேர்த்து உங்கள் வீட்டில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களான தயிர்ச்சட்டிகள், யோக்கட் கப்,சிரட்டைகள்,இளநீர் கோம்பைகள்,மூடியில்லா போத்தல்கள், சொப்பின் பைகள், பிளாஸ்ரிக் பாத்திரங்கள்,ரெஜிபோம் பெட்டிகள், டயர்கள், தகரப்பேணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனவே குறித்த பொருட்களை அகற்றியும்,குளிர் சாதண பெட்டியின் பின் பகுதியில் நீர் தேங்கும் தட்டையும்,ஏ.சி யின் நீர் தேங்கும் தட்டையும் வாரத்திற்கு இரு முறை நீரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் நீர் சேகரிக்கும் பாத்திரம் மற்றும் நில மட்டத்திற்கு கீழ் உள்ள நீர்த்தாங்கிகளில் நுளம்பு உள்ளே செல்லாத வகையில் மூடியினால் மூடி வைக்க வேண்டும்.
மேலும் அகற்ற முடியாத நீர் தேங்கும் பகுதிகளில் கப்பீஸ் போன்ற மீன்களை வளர்ப்பதன் மூலம் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த முடியும். பாவனை அற்ற நீர்த்தொட்டிகளை இடித்து அல்லது அப்புறப்படுத்தியும் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை இல்லாமல் செய்து டெங்கு குருதிப் பெருக்கு நோயில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சமூகத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகமாக காணப்படும் நேரங்களான காலையிலும்,மாலையிலும் 5 மணி முதல் 8 மணி வரையுமான காலப்பகுதியில் நுளம்பு கடித்தலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
காய்ச்சல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அரச வைத்திய சாலைகளில் அல்லது தகுதி வாய்ந்த வைத்திய அதிகாரி ஒருவரிடம் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவும்.
வைத்திய ஆலோசனைகளை புறக்கணிக்க வேண்டாம் என்பதுடன் காய்ச்சல் காலங்களில் வலி நிவாரண மாத்திரைகள்,அஸ்பிரின் போன்ற மாத்திரைகளை உபயோகிக்க வேண்டாம் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை விடுத்துள்ள துண்டுப்பிரசுரத்தின் குறிப்பிடப்பட்டுள்ளது. #மன்னார் #டெங்கு #விழிர்ப்புணர்வு #அறிவுறுத்தல்
Spread the love