உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30 ஆகிய திகதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக நீதிமன்றத்தை நாடப்போவதாக அறிவித்திருந்தாலும், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தற்போதே தேர்தலுக்கான பணிகளைத் ஆரம்பித்துள்ளன.
மக்களவைத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட்ட கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், அதன் பின்னர் நடைபெற்ற வேலூர் தேர்தல் மற்றும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணித்து விட்டது.
இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பாக மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் உள்ளாட்சித் தேர்தல் போட்டியிலிருந்தே மக்கள் நீதி மய்யம் விலகியுள்ளது.
இதுதொடர்பாக கமல்ஹாசன் நேற்று (டிசம்பர் 8) வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் நிகழவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முழுமையான மக்களின் தேர்வாக இருக்கப் போவதில்லை எனும் உண்மை அனைவரும் அறிந்ததே. இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கு பெறுவதால் கிட்டக்கூடிய முன்னேற்றம் சொற்பமானது. மாற்றத்தை லட்சியமாகக் கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் அதைத் தவணை முறையில் பெறுவதில் எந்தச் சாதனையும் இல்லை. மக்கள் நீதி மய்யத்தின் வெற்றிக்கான வித்து சாதுர்யமோ, பண பலமோ அல்ல. நேர்மையும் மக்கள் பலமுமே ஆகும்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ‘இத்தேர்தலில், மக்கள் பங்கீடு மிகக் குறைவாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே அரங்கேறப் போகிறது என்பதே பகிரங்கப்படுத்தப்படாத நிஜம். மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்கப் போவதில்லை. ஆதலால் மக்கள் நீதி மய்யத்தார் ஏற்கெனவே இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரத்தையும் ஏற்க மாட்டோம் என்பதே நமது பிரகடனமாக இருக்க வேண்டும்’ என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
‘வரும் ஐம்பது வாரங்களில் மக்கள் நலம்பேணி நற்பணிகள் செய்வோம். நாளை பறக்கப்போகும் நம் வெற்றிக்கொடியே தமிழகத்தின் அன்னக்கொடியாகும் என்பதை மக்கள் உணரச் செய்வோம். இதை மக்கள் திண்ணமாக நம்பவும் வைப்போம். 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நம் லட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம்’ என்று மக்கள் நீதி மய்யத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே, உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது எனவும் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் மூலமாக எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #உள்ளாட்சித்தேர்தல் #கமல்ஹாசன் #மக்கள்நீதிமய்யம்